பட்ஜெட்டில் சாம்ராஜ்நகர் மாவட்டம் நிராகரிப்பு


பட்ஜெட்டில் சாம்ராஜ்நகர் மாவட்டம் நிராகரிப்பு
x

கர்நாடக பட்ஜெட்டில் சாம்ராஜ்நகர் மாவட்டம் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக கூறி மாவட்ட மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

கொள்ளேகால்:-

கர்நாடக பட்ஜெட்

சாம்ராஜ்நகர் மாவட்டம் எலந்தூரில் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியை 100 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரியாக விரிவுபடுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதுபோல் பதனகுப்பே அருகே தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் இதுவரையில் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சமீபத்தில் கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தார். அப்போதும் மேற்கண்ட இரண்டு கோரிக்கைகள் குறித்தும், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது குறித்தும் பட்ஜெட்டில் எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள்

மாவட்டத்தில் பா.ஜனதாவைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்காக அவர்கள் எதையும் பெற்றுத்தராதது வருத்தம் அளிப்பதாக மக்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, சாம்ராஜ்நகர் மாவட்டத்தை முழுமையாக நிராகரித்து விட்டதாக அவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.279 கோடிக்கான திட்டங்களும் இதுவரையில் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் கூறினர். அதனால் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் விரைவில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story