பெலகாவி விமான நிலையத்திற்கு சங்கொள்ளி ராயண்ணா பெயர் சூட்ட ஆலோசனை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு


பெலகாவி விமான நிலையத்திற்கு சங்கொள்ளி ராயண்ணா பெயர் சூட்ட ஆலோசனை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
x

பெலகாவி விமான நிலையத்திற்கு சங்கொள்ளி ராயண்ணா பெயர் சூட்டுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு:

பெலகாவி விமான நிலையத்திற்கு சங்கொள்ளி ராயண்ணா பெயர் சூட்டுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

தியாகம் செய்தனர்

விடுதலை போராட்ட வீரர் சங்கொள்ளி ராயண்ணாவின் நினைவு நாள் நிகழ்ச்சி பெங்களூரு மெஜஸ்டிக்கில் உள்ள கோடே சர்க்கிளில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, சங்கொள்ளி ராயண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் பேசியதாவது:-

நமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்க யார் தங்களின் உயிரை தியாகம் செய்தனர் என்பது குறித்து குழந்தைகளுக்கு தெரிவிக்க வேண்டும். நமது குழந்தைகளுக்கு ஊக்கம் அளிக்கும் செயல்களை நாம் ஏற்படுத்த வேண்டும். பெலகாவி விமான நிலையத்திற்கு சங்கொள்ளி ராயண்ணாவின் பெயரை சூட்டுவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

சாகசம்-துணிச்சல்

அவர் செய்த நல்ல பணிகளில் ஒன்றோ அல்லது இரண்டையோ நாம் செய்தால் அதனால் நமது நாட்டிற்கு நல்லது ஏற்படும். நாட்டின் சுதந்திரத்திற்காக முதன் முதலில் போராடியவர் கித்தூர் ராணி சென்னம்மா. அவர்கள் போராட்டம் நடத்தி இருக்காவிட்டால், நமக்கு இவ்வளவு சீக்கிரம் சுதந்திரம் கிடைத்திருக்காது. சுதந்திர போராட்ட வீரர்களின் கதைகளை குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

சங்கொள்ளி ராயண்ணாவின் சாகசம், துணிச்சல், தைரியம், தேசபக்தி விஷயத்தில் உந்துசக்தியாக திகழ்கிறார். பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு அவரது பெயரை சூட்டியுள்ளோம். அவருக்கு சிலை அமைத்துள்ளோம். ரூ.184 கோடியில் சங்கொள்ளி ராயண்ணா பெயரில் உண்டு உறைவிட பள்ளியை நிறுவியுள்ளோம். அதற்கு ராணுவ பள்ளி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அந்த பள்ளி செயல்பட தொடங்கிவிட்டது. அது ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பள்ளியாக உள்ளது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.


Next Story