ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் சுதந்திர போராட்ட வீரர்கள் 'போஸ்டரில்' சாவர்க்கர் படம்
ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பாத யாத்திரைக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் போஸ்டர் வைக்கப்பட்டிருந்தது.
திருவனந்தபுரம்,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த 7-ம் தேதி தொடங்கினார்.
காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெற உள்ளது.
கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல்காந்தியின் பாத யாத்திரை பயணம் தற்போது 14-வது நாளாக கேரளாவில் நடைபெற்று வருகிறது. கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் ராகுல்காந்தி பாத யாத்திரையாக சென்று மக்களை சந்தித்து வருகிறார்.
இதனிடையே, ராகுல்காந்தியின் பாத யாத்திரையையொட்டி அவர் செல்லும் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கட்சி கொடிகள், போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ராகுல்காந்தியின் பாத யாத்திரையையொட்டி அவரை வரவேற்கும் விதமாக காங்கிரஸ் கட்சி சார்பில் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவாவில் வைக்கப்பட்ட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரம் நீளமாக வைக்கப்பட்டுள்ள அந்த போஸ்டரில் சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. ஆனால், அந்த போஸ்டரில் சுதந்திர போராட்ட வீரர்கள் பட்டியலில் சாவர்க்கரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்ட போஸ்டரில் சாவர்க்கரின் புகைப்படம் இடம்பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் சாவர்க்கரின் புகைப்படத்தை அகற்றிவிட்டு அந்த புகைப்படத்திற்கு மேல் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை காங்கிரஸ் கட்சியின் ஒட்டினர்.
மேலும், அச்சிட்டத்தில் ஏற்பட்ட தவறால் மகாத்மா காந்திக்கு பதிலாக தவறுதலாக சாவர்க்கரின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.