பிட்காயின் முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என கூறி 2பேரிடம் ரூ.87 லட்சம் மோசடி


பிட்காயின் முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என கூறி 2பேரிடம் ரூ.87 லட்சம் மோசடி
x

பிட்காயின் முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறி பெண் உள்பட 2 பேரிடம் ரூ.87 லட்சம் மோசடி செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மைசூரு:-

பிட்காயினில் முதலீடு

இன்றைய தகவல் தொழில்நுட்ப காலத்தில் மோசடிகள் அதிகரித்து விட்டன. பரிசுகள் விழுந்து இருப்பதாகவும், இரட்டிப்பு பணம் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டு மக்களை ஏமாற்றி நொடிப்பொழுதில் வங்கி கணக்கில் உள்ள பணத்தை மோசடி செய்யும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் மைசூருவில் பிட்காயின் முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறி 2 பேரிடம் மர்மநபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

பெண்ணிடம் ரூ.52 லட்சம் மோசடி

மைசூரு டவுனில் பிருந்தாவன் படாவனே பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் பிட்காயினில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறி ஒரு செல்ேபான் எண்ணும் பதிவிடப்பட்டுள்ளது. அந்த எண்ணை தொடர்பு கொண்டு விஜயலட்சுமி பேசியுள்ளார்.

அப்போது மர்மநபர்கள் பிட்காயினில் முதலீடு செய்தால் கூடுதல் பணம் சம்பாதிக்கலாம் என கூறி ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய விஜயலட்சுமி ரூ.52 லட்சத்தை மர்மநபர் கூறியபடி பிட்காயினில் முதலீடு செய்துள்ளார். இந்த தொகையை விஜயலட்சுமி வங்கியில் கடன் வாங்கி முதலீடு செய்துள்ளார்.

இன்னொருவரிடம் ரூ.35 லட்சம்...

ஆனால் நீண்ட நாள் ஆகியும் அவருக்கு பணம் கிடைக்கவில்லை. அப்போது தான் மர்மநபர், பிட்காயின் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி மோசடி செய்தது அவருக்கு தெரியவந்தது.

அதுபோல் மைசூருவை சேர்ந்த முகமது ஜாவேத்திடமும் மர்மநபர் டெலிகிராம் செயலி மூலம் தொடர்பு கொண்டு பிட்காயினில் முதலீடு செய்தால் பணம் சம்பாதிக்கலாம் என கூறி ரூ.35 லட்சத்தை மோசடி செய்துள்ளார்.

போலீஸ் வலைவீச்சு

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட இருவரும் தனித்தனியாக மைசூரு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story