எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு அதிகரிப்பு: பிற சமூகங்களும் இட ஒதுக்கீடு கேட்கின்றன- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி


எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு அதிகரிப்பு:  பிற சமூகங்களும் இட ஒதுக்கீடு கேட்கின்றன-  முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பிற சமூகங்களும் இடஒதுக்கீடு கேட்கின்றன என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு: பிற சமூகங்களும் இடஒதுக்கீடு கேட்கின்றன என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

இட ஒதுக்கீடு

கர்நாடகத்தில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கான இட ஒதுக்கீடு 18 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக உயா்த்துவது என்று மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதாவது ஆதிதிராவிடர்களுக்கு 15-ல் இருந்து 17 ஆகவும், பழங்குடியினருக்கு 3-ல் இருந்து 7 ஆகவும் அதிகரிக்கப்படுகிறது. இதனால் மற்ற சமூகங்களும் தங்களின் இட ஒதுக்கீடு குறித்த கோரிக்கையை நிறைவேற்றுமாறு அரசை வலியுறுத்த தொடங்கியுள்ளன. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இதனால் பிற சமூகங்களும் இட ஒதுக்கீடு விஷயத்தில் தங்களின் விருப்பங்களை நிறைவேற்றுமாறு வலியுறுத்துகின்றன. பஞ்சமசாலி சமூகத்தினர் தங்களுக்கு 2ஏ அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.

சட்ட பாதுகாப்பு

குருபா சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். வீரசைவ லிங்காயத் மற்றும் ஒக்கலிகர் சமூகங்கள் தங்களை பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கேட்கிறார்கள். நாங்கள் முதலில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் இட ஒதுக்கீடு கோரிக்கையை கையில் எடுத்துள்ளோம். அவர்களின் இந்த கோரிக்கைக்கு சட்ட பாதுகாப்பு வழங்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிப்பது, அந்தஸ்தை மாற்றுவது குறித்து நிரந்தர பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளது. மேலும் நிபுணர்களும் உள்ளனர். அவர்களின் கருத்துகளையும் கேட்போம். அதன் அடிப்படையில் அரசு உரிய முடிவை எடுக்கும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

========


Next Story