இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம்-19-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு வருகிற 19-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
பெங்களூரு:-
கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது.
5 இலவச திட்டங்கள்
அக்கட்சி தேர்தல் அறிக்கையின் போது, பெண்களுக்கு இலவச பஸ் பயணம், பி.பி.எல். ரேஷன் கார்டுதாரர்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கும் திட்டம், 200 யூனிட் இலவச மின்சார திட்டம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ரூ.3,000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500-ம் வழங்கப்படும் என அறிவித்தது.
அதன்படி ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, கடந்த மாதம் (ஜூன்) 11-ந்தேதி முதல் பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயண திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல் 10 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தில், 5 கிலோ அரிசியும், மீதி 5 கிலோவுக்கு பதிலாக பணம் வழங்கும் திட்டமும் கடந்த 9-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 200 யூனிட் இலவச மின்சார திட்டம் ஜூலை முதல் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது ஆகஸ்டு மாதம் முதல் 200 யூனிட் மின்சாரம் பயனாளிகளுக்கு இலவசமாக கிடைக்க உள்ளது.
ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை திட்டம்
இந்த நிலையில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேர இல்லத்தரசிகள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது.
இந்த நிலையில், மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் சேர வருகிற 19-ந்தேதி (புதன்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என கர்நாடக அரசு நேற்று அறிவித்தது.
இதுதொடர்பாக பெங்களூருவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
19-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
காங்கிரஸ் அரசு அமைந்தால் 5 இலவச திட்டங்களை அமல்படுத்துவோம் என்று அறிவித்திருந்தோம். அதன்படி, அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம், அன்ன பாக்யா, 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டமும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) தொடங்க உள்ளது. அடுத்த மாதம் 16 அல்லது 17-ந் தேதி பெண்களின் வங்கி கணக்குக்கு ரூ.2 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும்.
இந்த திட்டம் மூலமாக 1.28 கோடி குடும்ப பெண்கள் பயன் அடைவார்கள். கிரகலட்சுமி திட்டத்தின் கீழ் பயன் அடைய விரும்பும் பெண்கள் வருகிற 19-ந் தேதி (புதன்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். கர்நாடக ஒன், பெங்களூரு ஒன், கிராம ஒன் மையங்களுக்கு சென்று கிரகலட்சுமி திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்.
வங்கி கணக்குடன் ஆதார்...
ஏ.பி.எல், பி.பி.எல் மற்றும் அந்தியோதயா அட்டை வைத்திருப்பவர்கள், குடும்ப தலைவி யார்? என்று தீர்மானித்து விண்ணப்பிக்க வேண்டும். கிரகலட்சுமி திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது ஆதார் கார்டு,
ரேஷன் கார்டு கட்டாயம் வைத்திருக்க வேண்டும். செல்போன் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருக்கும் ஆதார் கார்டு வைத்திருப்பது அவசியம். ஆதார் கார்டுடன் வங்கி கணக்கு இணைத்திருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை.
அவர்கள் வங்கி கணக்கு பற்றிய ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டாம். வங்கி கணக்குடன் ஆதார் இணைக்காமல் இருந்தால், சம்பந்தப்பட்ட வங்கி கணக்கு தொடர்பான ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும். அதே நேரத்தில் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்களின் ஆதார், ரேஷன் கார்டு, வங்கி கணக்கில் இருக்கும் பெயர் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
குறுந்தகவல் அனுப்பலாம்
கிரகலட்சுமி திட்டம் பற்றி பெண்களுக்கு ஏதேனும் தகவல் பெற நினைத்தால் 8147500500 என்ற இலவச செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பி தகவலை பெறலாம். சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக தகவல்கள் அனுப்பி வைக்கப்படும்.
மேலும் 1902 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியும் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் விண்ணப்பங்களை பெறுவதற்காக ஒவ்வொரு மையத்திலும் ஒரு ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் பணியில் இருப்பார்கள். விண்ணப்பிக்கும் நபர்களின் தகவல்களை பதிவு செய்ய ரூ.10 மற்றும் கட்டணம் ரூ.2 என ஒட்டு மொத்தமாக ரூ.12 மட்டும் கொடுத்தால் போதும்.
சித்தராமையா தொடங்கி வைக்கிறார்
கிரகலட்சுமி திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்களிடம் ரூ.12-க்கு மேல் யார் பணம் கேட்டாலும் கொடுக்க வேண்டாம். இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்க அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை அழைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. சோனியா காந்தி பங்கேற்க வாய்ப்பில்லை என்று தெரியவந்து உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் பங்கேற்க முடியாத பட்சத்தில் வருகிற 19-ந் தேதி பெங்களூரு விதானசவுதாவில் முதல்-மந்திரி சித்தராமையா இல்லத்தரசிகள் ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை திட்டத்தில் சேர விண்ணப்பிக்கும் பணியை தொடங்கி வைக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.