மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கும் பள்ளி நலக்குழு உருவாக்க வேண்டும் - வழிகாட்டுதல் வரைவு வெளியீடு
மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கும் நலக்குழு பள்ளிகளில் உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல் வரைவை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
புதுடெல்லி,
நீட் தேர்வு உள்ளிட்ட தேர்வு முடிவுகள் வெளியாகும் சமயங்களில் மாணவர் தற்கொலைகள் பரவலாக நடக்கின்றன. மேலும் பல்வேறு காரணங்களாலும் மாணவர்கள் மனம் உடைந்து தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதுபோன்ற மாணவர் தற்கொலைகளை தடுக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வந்தது.
போட்டித் தேர்வு பயிற்சி நகரமான ராஜஸ்தானின் கோடாவில், என்ஜினீயரிங் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வரும் சூழலில், சிலர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்கொலைகளை தடுப்பதற்காக 'உம்மீட்' எனும் வழிகாட்டு வரைவை மத்திய பள்ளிக் கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
அந்த வரைவில் பல்வேறு வழிகாட்டுதல்கள் இடம்பெற்று உள்ளன. அவை வருமாறு:-
* பள்ளி முதல்வர் தலைமையில் பள்ளி நலக்குழு உருவாக்கலாம். அதன் உறுப்பினர்கள் தற்கொலை உள்ளிட்ட நெருக்கடியான சூழ்நிலைகளை கையாள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
* மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்தால் பெற்றோரோ அல்லது அதை அறியும் சமூகத்தினரோ நலக்குழுவினரிடம் தெரிவித்து தற்கொலையை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
* பள்ளியில் சக மாணவர்களுடன் ஒப்பிடுதல், தோல்வியை கண்டு அஞ்சுதல், தோல்வியை நிரந்தரம் என எண்ணி அதிலிருந்து மீள முடியாமல் தவித்தல், படிப்பதற்கு பயப்படுதல், வெற்றி அளவீடு குறித்த பயங்கள் உள்ளிட்டவற்றை களைய முயற்சிக்க வேண்டும்.
* காலியான வகுப்பறைகளை பூட்டி வைத்தல், இருண்ட தாழ்வாரங்களை ஒளிரச் செய்தல், தோட்ட பகுதிகளை சுத்தமாக பராமரித்தல் போன்றவையும் பின்பற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.