நாடாளுமன்ற சாலையில் 144 தடை உத்தரவு - எதிர்க்கட்சிகள் பேரணி செல்லவிருந்த நிலையில் நடவடிக்கை
நாடாளுமன்றத்திற்கு வெளியே உள்ள சாலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று முன் தினம் தொடங்கியது. அவை தொடங்கியவுடன் இந்திய ஜனநாயகம் குறித்த லண்டனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் பாஜக, காங்கிரஸ் உறுப்பினர்கள் மோதலில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது
இதனை தொடர்ந்து அதானி விவகாரம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பினர். இதனால், திங்கட்கிழமை முதல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடும் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்றும் காலை நாடாளுமன்றம் தொடங்கியது முதல் இரு அவைகளும் கடும் அமளி காரணமான மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அதானி விவகாரம் குறித்து விசாரிக்கக்கோரி நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் அமலாக்கத்துறை அலுவலகம் வரை பேரணியாக செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
இந்த சூழ்நிலையில் நாடாளுமன்றத்திற்கு வெளியே உள்ள சாலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் பேரணியை தடுக்கும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனாலும், தடையை மீறி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி எதிர்க்கட்சிகள் பேரணி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.