பஞ்சாபில் 424 பேருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு நீக்கம் - மாநில அரசு முடிவு
ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், மத தலைவர்கள் என 424 பேருக்கு வழங்கி வந்த பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து பகவந்த் மான் பஞ்சாப் மாநிலத்தின் முதல்-மந்திரியாக பதவியேற்றார். தனது ஆட்சியில் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை மந்திரி விஜய் சிங்லா மீது ஊழல் புகார் எழுந்ததையடுத்து, அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தார். மேலும் பஞ்சாப் மாநில ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார், விஜய் சிங்லாவை கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து பகவந்த் மான் அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், மத தலைவர்கள் என 424 பேருக்கு வழங்கி வந்த பாதுகாப்பை ரத்து செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம், பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி சரண்ஜித் சிங் சன்னியின் குடும்பத்தினர், கேப்டன் அமரிந்தர் சிங்கின் மகன் உள்ளிட்ட 184 பேருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை பஞ்சாப் அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.