சட்டசபை தேர்தல் விதிமீறல்: இதுவரை ரூ.78 கோடி ரொக்கம், பரிசு பொருட்கள் பறிமுதல்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் விதிகளை மீறி கொண்டு செல்லப்பட்ட பணம், நகைகள், பொருட்கள் என மொத்தம் இதுவரையில் ரூ.78 கோடி மதிப்பிலான ரொக்கம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
கர்நாடக தலைமை தேர்தல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்டதாக இதுவரை ரூ.77 கோடியே 93 லட்சத்து 28 ஆயிரத்து 993 மதிப்புள்ள ரொக்கம், பரிசு பொருட்கள், மதுபானம், போதைப்பொருள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ரொக்கம் ரூ.27 கோடியே 38 லட்சத்து 21 ஆயிரத்து 221, ரூ.26 கோடியே 38 லட்சத்து 67 ஆயிரத்து 100 மதிப்புள்ள மதுபானம், ரூ.9 கோடியே 87 லட்சத்து ஒரு ஆயிரத்து 791 மதிப்புள்ள 25.24 கிலோ தங்க நகைகளும், ரூ.92 லட்சத்து 90 ஆயிரத்து 980 மதிப்புள்ள 134.42 கிலோ வெள்ளி பொருட்களும், ரூ.12 கோடியே 48 லட்சத்து 57 ஆயிரத்து 991 மதிப்புள்ள பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 627 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 47 ஆயிரத்து 718 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.