போலி ஆவணங்கள் தயாரித்து நிலங்கள் விற்பனை- 5 பேர் கைது
போலி ஆவணங்கள் தயாரித்து நிலங்களை விற்பனை செய்த பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
வித்யாரண்யபுரா:-
பெங்களூரு வித்யரண்யபுரா பகுதியில் போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் தயாரித்து நிலங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வித்யரண்யபுரா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது அங்கு ஒரு கடையில் வைத்து போலி ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் தயாரித்து மர்மகும்பல் நிலங்களை விற்பனை செய்தது தெரிந்தது.
இதையடுத்து அங்கிருந்த சுல்தான், கபீர், ஜக்தீஸ், ஜெயம்மா, வைஷாலி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 100 கிராம் தங்க நகைகள், ஒரு கார், போலி ஆதார் அட்டைகள், ஆவணங்கள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் போலியாக ஆவணங்கள் தயாரித்து கேட்பாரற்று இருக்கும் நிலங்களை விற்று லாபம் சம்பாதித்து வந்தது தெரிந்தது.