கட்டாய மதமாற்ற புகார்...! - மதவழிபாட்டு தலத்தை அடித்து நொறுக்கிய மக்கள்
கட்டாய மதமாற்ற புகாரில் மதவழிபாட்டு தலத்தை மக்கள் அடித்து நொறுக்கினர்.
ராய்ப்பூர்,
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டம் இட்கா கிராமத்தில் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூட வளாகத்திற்குள் கிறிஸ்தவ மதவழிபாட்டு தலம் உள்ளது.
இங்கு கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாக புகார்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இதையடுத்து, கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக அந்த கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. மக்கள் கூட்டமாக கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்திற்கு சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். மேலும், மத வழிபாட்டு தலத்தையும் சேதப்படுத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தார். போராட்டக்காரர்களை தடுக்க முயற்சித்தபோது மாவட்ட எஸ்.பி. சதானந்த் குமார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் மாவட்ட எஸ்.பி. காயமடைந்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.