மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று போலீஸ் அதிகாரி தற்கொலை
மனைவி மற்றும் உறவினரை சுட்டுக்கொன்ற போலீஸ் துணை ஆணையர் தானும் தற்கொலை செய்துகொண்டார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் போலீஸ் துணை ஆணையராக பணியாற்றி வருபவர் பரத் கெய்குவாட் (வயது 57). இவருக்கு மொனு கெய்குவாட் (வயது 44) என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் புனேவின் பனீர் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். வீட்டிற்கு தீபக் (வயது 33) என்ற உறவினரும் வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு பரத்தும் அவரது மனைவி மொனுவும் வீட்டில் ஒரு அறையில் உறங்கிக்கொண்டிருந்தனர். பக்கத்து அறையில் பரத்தின் மகனும், உறவினர் தீபக்கும் உறங்கிக்கொண்டிருந்தனர்.
அதிகாலை 3.30 மணியளவில் திடீரென போலீஸ் அதிகாரி பரத் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மனைவி மொனுவின் தலையில் சுட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் மொனு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த பரத்தின் மகன் மற்றும் உறவினர் தீபக் தங்கள் அறையில் இருந்து ஓடி வந்து பக்கத்து அறையை திறந்துள்ளனர்.
அப்போது, மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பரத் உறவினர் தீபக் மற்றும் மகன் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில், தீபக் சம்பவ இடத்திலேயெ உயிரிழந்தார். பரத்தின் மகன் துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பினார்.
பின்னர், தனது துப்பாக்கியால் போலீஸ் துணை ஆணையர் பரத் தன்னை தானே தலையில் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் பரத் அவரது மனைவி மொனு, உறவினர் தீபக் என 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் உடலையும் மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனைவி, உறவினரை சுட்டுக்கொன்றுவிட்டு போலீஸ் அதிகாரி தானும் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.