கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் முஸ்லிம்களுக்கு மீண்டும் தனி இடஒதுக்கீடு; கட்சி தலைவர்கள் அறிவிப்பு
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் முஸ்லிம்களுக்கு மீண்டும் 4 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அக்கட்சி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
பெங்களூரு:
தனி இடஒதுக்கீடு
கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத தனி இடஒதுக்கீடு இருந்து வந்தது.அந்த தனி இடஒதுக்கீட்டை மாநில அரசு ரத்து செய்தது. மேலும் ஒக்கலிகர்கள், லிங்காயத் சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீட்டை அதிகரித்து அரசு அறிவித்தது. இதற்கான அறிவிப்பை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சமத்துவ சமுதாயம்
கா்நாடகத்தில் பா.ஜனதா அரசு இட ஒதுக்கீடு தொடர்பாக குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பழிவாங்கும் அரசியல் செய்து, மக்களை சாதி, மத அடிப்படையில் பிரிக்க இந்த அரசு முயற்சி செய்துள்ளது. மக்களுக்கு தவறான தகவலை அளித்து திசை திருப்பும் பணியை பா.ஜனதா அரசு செய்துள்ளது. இதன் மூலம் மக்களுக்கு இந்த அரசு துரோகம் செய்துள்ளது.
அம்பேத்கர் உருவாக்கியுள்ள அரசியல் சாசனம், சாதி, மத பேதமின்றி அனைவரையும் சமமாக பாதுகாக்க வேண்டும் என்று சொல்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தி அவர்களையும் முன்னிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பது தான் அரசியல் சாசனத்தின் நோக்கம் ஆகும். சமூக, கல்வி ரீதியாக பின்னிலையில் உள்ளவர்களை முன்னிலைக்கு கொண்டு வந்தால் தான் சமத்துவ சமுதாயம் படைக்க முடியும்.
இட ஒதுக்கீடு
சாதிகள் இருக்கும்வரை இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் சொன்னார். சாதி முறையால் தான் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு, மக்கள்தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரசியல் சாசனம் சொல்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் முதலில் குறிப்பிடவில்லை. இதையடுத்து அதில் திருத்தம் செய்து அந்த அம்சம் சேர்க்கப்பட்டது.
1995-ம் ஆண்டு சிறுபான்மையின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதை ரத்து செய்யுமாறு இதுவரை எந்த கோர்ட்டும் உத்தரவிடவில்லை. எந்த குழுக்களும் அறிக்கை வழங்கவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க கர்நாடக அரசு, முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது ஏன்?. இதன் மூலம் விரோத அரசியல் செய்வது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.
நீக்க முடியாது
மொத்த இட ஒதுக்கீட்டு அளவு 50 சதவீதத்தை தாண்ட கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பு கூறியுள்ளது. இதை தாண்டி இட ஒதுக்கீட்டை அதிகரித்தால், அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் பட்டியலில் இருந்து ஒரு சாதியை நீக்க வேண்டுமென்றால், பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அறிக்கை வழங்கி இருக்க வேண்டும். அவ்வாறு அறிக்கை இல்லாமல் ஒரு சமூகத்தை நீக்க முடியாது.
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து முஸ்லிம்களை நீக்கியது அவர்களுக்கு செய்யும் அநீதி இல்லையா?. தலித், பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு 24 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாங்களும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வந்தோம். ஆனால் மொத்த இட ஒதுக்கீடு 56 சதவீதத்தை தொட்டுள்ளது. இது அரசியல் சாசனம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது.
அரசியல் மாயாஜாலம்
அதனால் இதுகுறித்து அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று சொல்கிறோம். ஆனால் மத்திய அரசை இதுவரை அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று இந்த பா.ஜனதா அரசு கேட்கவில்லை. நாங்கள் போராட்டம் நடத்துவதாக கூறிய பிறகு 23-ந் தேதி மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். ஒக்கலிகர், லிங்காயத், தலித் உள்ளிட்ட சமூகங்களுக்கு பா.ஜனதா அரசு இட ஒதுக்கீட்டை அதிகரித்து இருப்பது அரசியல் மாயாஜாலம். இதில் யாருக்கும் நீதி வழங்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை. இதை மாநில மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டுமா?.
பா.ஜனதா எப்போதும் சமூக நீதிக்கு ஆதரவாக நின்றது இல்லை. மண்டல் கமிஷன் அறிக்கையை எதிர்த்தனர். அரசியல் சாசனத்திற்கு எதிராக இட ஒதுக்கீடு குறித்து முடிவு எடுத்துள்ள கர்நாடக பா.ஜனதா அரசை கலைக்க வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மீண்டும் முஸ்லிம்களுக்கு மீண்டும் 4 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
ஒக்கலிகர்கள்
பா.ஜனதா அரசின் இட ஒதுக்கீடு உயர்வை ஒக்கலிகர்கள் மற்றும் வீரசைவ லிங்காயத்துகள் நிராகரித்துள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பட்டியலில் இருந்து முஸ்லிம்களை நீக்கியது தவறு. தேர்தலில் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால், பசவராஜ் பொம்மை உணர்வு பூர்வமான விஷயங்களை கொண்டு வருகிறார். பா.ஜனதா அரசு, இட ஒதுக்கீட்டை சொத்துகளை பங்கு பிரித்து கொடுப்பது போல் நினைக்கிறது. இது சொத்து அல்ல. இது சிறுபான்மையினரின் உரிமை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.