காளி தெய்வம் பற்றி சர்ச்சை கருத்து: "நான் டுவீட் செய்த அனைத்தும் எனது தனிப்பட்ட கருத்து" - காங்கிரஸ் தலைவர் சசி தரூர்


காளி தெய்வம் பற்றி சர்ச்சை கருத்து: நான் டுவீட் செய்த அனைத்தும் எனது தனிப்பட்ட கருத்து - காங்கிரஸ் தலைவர் சசி தரூர்
x

சசி தரூர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு, ‘காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல’ என்று அக்கட்சியால் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

காளி என்ற பெயரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் இயக்குனர் லீனா மணிமேகலை எடுத்துள்ள ஆவண பட போஸ்டரில் இந்து பெண் தெய்வம் காளி, புகைபிடிப்பதுபோல சித்தரிக்கப்பட்டிருந்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது "காளிதேவியை மாமிசம் சாப்பிடுகிற, மது அருந்துகிற தெய்வமாக கற்பனை செய்வதற்கு தனி நபராக எனக்கு முழு உரிமை உள்ளது" என கூறியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது இந்த கருத்து, அவரது தனிப்பட்ட கருத்து என கூறிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அதற்காக கண்டனம் தெரிவித்தது.

இந்த கருத்துக்கு ஆதரவாக பதிவிட்ட சசி தரூர், "நமது வழிபாட்டு முறைகள் நாடு முழுவதும் பரவலாக வேறுபடுகின்றன என்று ஒவ்வொரு இந்துவும் நன்கு அறிந்த விஷயத்தை தான் மகுவா மொய்த்ரா கூறியுள்ளார். ஆனால் அதை சொன்னதற்காக மகுவா மொய்த்ரா மீதான தாக்குதலால் நான் இன்னும் அதிர்ச்சியடைந்தேன்.

பக்தர்கள் தெய்வங்களுக்கு பிரசாதம் வழங்கும் முறை என்பது, அந்த தெய்வத்தை விட அதை கொடுக்கும் மக்களை பற்றி அதிகம் கூறுகிறது. நாட்டில் யாரையும் புண்படுத்துவதாகக் கூறாமல், மதத்தின் எந்த அம்சத்தைப் பற்றியும் யாரும் பகிரங்கமாக எதுவும் சொல்ல முடியாத நிலைக்கு நாம் வந்துவிட்டோம்.

மகுவா மொய்த்ரா யாரையும் புண்படுத்த முயற்சிக்கவில்லை என்பது வெளிப்படையானது. ஒவ்வொருவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன் மற்றும் தனிப்பட்ட முறையில் மதத்தை கடைப்பிடிக்க நான் அவரவரிடமே விட்டுவிடுகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவின் காளி தேவி தொடர்பான சர்ச்சை குறித்து சசி தரூர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு, 'காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல என்றும் அது முழுக்க முழுக்க சசி தரூரின் தனிப்பட்ட கருத்து' என்று அக்கட்சியால் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "நான் டுவீட் செய்த அனைத்தும் எனது தனிப்பட்ட கருத்து" என்று காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். "ஒன்றுக்கும் துணை நிற்காதவர்கள், எந்தவொரு விஷயத்திற்கும் வீழ்வார்கள் - அலெக்சாண்டர் ஹாமில்டன்" என்பதையும் பதிவிட்டு மறைமுகமாக சாடியுள்ளார்.



Next Story