ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி டிரைவருக்கு ஜாமீன்
ஷீனா போரா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான இந்திராணி டிரைவருக்கு ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மும்பை,
மும்பையை சேர்ந்த ஊடக நிர்வாகியான இந்திராணி முகர்ஜி தான் பெற்ற மகளான ஷீனா போராவை கொன்று உடலை எரித்த வழக்கு கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இந்திராணியின் கார் டிரைவர் ஷியாம்வர் ராய் மற்றொரு வழக்கில் சிக்கியபோது போலீசாரிடம் குடிபோதையில் அளித்த வாக்குமூலத்தில், ஷீனா போரா கொலை ரகசியத்தை கக்கினார். இந்திராணி சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருந்ததால், போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகு அவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரது முதல் கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷியாம்வர் ராய், அப்போதைய கணவரும், ஊடக நிர்வாகியுமான பீட்டர் முகர்ஜி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். பீட்டர் முகர்ஜியின் மகனை முறைதவறி காதலித்ததால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
இதில் ஷியாம்வர் ராயை தவிர மற்ற அனைவரும் நீண்ட காலத்திற்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். சமீபத்தில் தான் இந்திராணி சிறையில் இருந்து வெளியே வந்தார்.இந்த நிலையில் ஷியாம்வர் ராயும் ஜாமீன் கேட்டு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.இந்த கொலை வழக்கில் ஷியாம்வர் ராய் அப்ரூவராக மாறி இருந்தது குறிப்பிடத்தக்கது.