சிவசேனா வழக்கு; உத்தரவு பிறப்பிக்க தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு திடீர் தடை
சிவசேனா தேர்தல் சின்னம் வழக்கில் வரும் வியாழ கிழமை வரை எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம் என தேர்தல் ஆணையத்திடம் சுப்ரீம் கோர்ட்டு கேட்டு கொண்டுள்ளது.
புதுடெல்லி,
மராட்டியத்தில் ஆட்சி செய்து வந்த சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசுக்கு எதிராக மந்திரியாக இருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஒன்றிணைந்ததில் அரசு கவிழ்ந்தது. இதனால் முதல்-மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து அதிருப்தி அணி, பா.ஜ.க.வுடன் கைகோர்த்து மராட்டியத்தில் ஆட்சியை கைப்பற்றியது. அதிருப்தி அணிக்கு தலைமையேற்ற ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி ஆனார்.
சிவசேனா, உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே என இரு அணிகளாக உடைந்து உள்ளன. இதில் வில் அம்பு சின்னம் தங்களுக்கு சொந்தம் என இரு அணிகளும் இந்திய தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளன. எனவே இரு தரப்பினரையும், தேவையான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம், கட்சி தொடர்புடைய பிற தொழில்நுட்ப விவகாரங்கள், சிவசேனாவை உரிமை கோருவது தொடர்புடைய வழக்குகள், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி மற்றும் ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தன.
இதன் மீது நடந்த விசாரணையில், சிவசேனாவை உரிமை கோருவது தொடர்புடைய வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவு பிறப்பித்து உள்ளது. மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இடையே கட்சிக்கு உரிமை கோரும் வழக்கில் தீர்வு காண்பதற்காக 8 கேள்விகளையும் வகுத்து அந்த அமர்வுக்கு அனுப்பி வைத்து உள்ளது.
தொடர்ந்து, கட்சி சின்னம் தொடர்புடைய விவகாரத்தில், வருகிற வியாழ கிழமை வரை எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம் என தேர்தல் ஆணையத்திடம் சுப்ரீம் கோர்ட்டு கேட்டு கொண்டுள்ளது. இந்த வழக்கை 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வானது நாளை மறுநாள் விசாரணை செய்ய உள்ளது.