உ.பி.யில் அதிர்ச்சி; பணி முடிந்து வீடு திரும்பிய நர்ஸ் பலாத்காரம்-கொலை


உ.பி.யில் அதிர்ச்சி; பணி முடிந்து வீடு திரும்பிய நர்ஸ் பலாத்காரம்-கொலை
x

உத்தரபிரதேசத்தில் செவிலியரின் மொபைல் போன், பர்சில் இருந்த ரூ.3 ஆயிரம் பணம் ஆகியவற்றை எடுத்து கொண்டு அந்த நபர் தப்பி சென்று விட்டார்.

பிலாஸ்பூர்,

உத்தரபிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் திப்திபா கிராமத்தில் காசிப்பூர் சாலையில், 11 வயது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த பெண் செவிலியர் (நர்ஸ்) ஒருவர் உத்தரகாண்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 30-ந்தேதி மாலையில் தன்னுடைய பணி முடிந்ததும் ரிக்சா ஒன்றில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டவர் அதன்பின் காணாமல் போனார்.

அவர், ருத்ராப்பூரின் இந்திரா சவுக் பகுதியில் இ-ரிக்சாவில் ஏறும் காட்சி கடைசியாக சி.சி.டி.வி.யில் பதிவாகி இருந்தது. அவர் காணாமல் போனதுபற்றி அவருடைய சகோதரி மறுநாள் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றிய விசாரணையில், 8 நாட்களுக்கு பின் செவிலியரின் வீட்டில் இருந்து 1.5 கி.மீ. தொலைவில் காலி மனையில் அவருடைய உடலை போலீசார் கண்டெடுத்தனர்.

பெண் செவிலியரிடம் இருந்து திருடப்பட்ட மொபைல் போனை போலீசார் கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து, குற்றவாளியான தர்மேந்திரா என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தினக்கூலி தொழிலில் ஈடுபட்டு வந்த அந்நபர், சம்பவத்தன்று பெண் செவிலியரை பின் தொடர்ந்து சென்றிருக்கிறார். குடியிருப்புக்குள் நுழைய முயன்ற அவரை அடித்து, தாக்கியுள்ளார். அருகேயுள்ள புதர் பகுதிக்குள் இழுத்து சென்று பலாத்காரம் செய்து, அவருடைய கைக்குட்டையாலேயே மூச்சு திணற செய்து, கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார்.

செவிலியரின் மொபைல் போன், பர்சில் இருந்த ரூ.3 ஆயிரம் பணம் ஆகியவற்றையும் போகும்போது எடுத்து கொண்டு சென்று விட்டார். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொடூர சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மேற்கு வங்காளம் உள்பட நாட்டின் பல பகுதிகளில் டாக்டர்கள் பலர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான கடுமையான சட்டங்கள் வேண்டும் என கோரி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், அந்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.


Next Story