மம்தா பானர்ஜிக்கு பெரும் இழப்பு; மேற்கு வங்காள மந்திரி மரணம்


மம்தா பானர்ஜிக்கு பெரும் இழப்பு; மேற்கு வங்காள மந்திரி மரணம்
x

மேற்கு வங்காள மந்திரி சுப்ரதா சாஹா மரணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் இறந்தார்.

கொல்கத்தா

மேற்குவங்காள உணவு பதப்படுத்துதல் துறை இணை மந்திரியாக இருந்தவர் சுப்ரதா சாஹா(வயது 69). இவர் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக பெர்காம்பூரில் உள்ள முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இன்று காலை 10.40 மணியளவில் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார்.

சுப்ரதா சாஹா முர்ஷிதாபாத்தில் உள்ள சாகர்திகி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார். சமீபத்தில் சுப்ரதாவின் பித்தப்பை அறுவை சிகிச்சை கொல்கத்தாவில் நடைபெற்றது.இதை தொடர்ந்து அவர் குணமடைந்து நேற்று காலை தான் வீடு திரும்பி இருந்தார். ஆனால் இரவில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதன் பிறகு, அவர் பெர்காம்பூரில் உள்ள முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் இன்று காலை மரணமடைந்தார்.

சுப்ரதா சாஹா திடீர் மரணம் அடைந்ததற்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில், "சுப்ரதாபாபுவுடன் எனக்கு நீண்ட நெடிய உறவு இருந்தது. அவரது அரசியல் மற்றும் சமூகப் பங்களிப்புகள் என்றும் நினைவுகூரப்படும். சுப்ரதா சாஹாவின் மறைவால் அரசியல் உலகில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் எனக் கூறி உள்ளார்.


Next Story