பாஜக கட்சி நிகழ்ச்சியில் இரு தரப்பினர் இடையே மோதல், துப்பாக்கிச்சூடு - ஒருவர் படுகாயம்
பாஜக கட்சி நிகழ்ச்சியில் இரு தரப்பினர் இடையே மோதலில் துப்பாக்கிச்சூடு சம்பவமும் அரங்கேறியுள்ளது.
பாட்னா,
பீகார் மாநிலம் மதிப்பூரா மாவட்டம் முர்லிகஞ்ச் பகுதியில் இன்று பாஜக கட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் பாஜகவினர் ஒருவர் மீது ஒருவர் இருக்கைகளை வீசி மோதிக்கொண்டனர். அப்போது, திடீரென பங்கஜ் என்ற பாஜக நிர்வாகி தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் சக கட்சியினரை நோக்கி சுட்டார்.
இந்த துப்பாக்கிச்சூட்டால் அதிர்ச்சியடைந்த பாஜகவினர் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினார். துப்பாக்கிச்சூட்டில் சஞ்சய் பகத் என்ற பாஜக நிர்வாகியில் காலில் குண்டு பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த சஞ்சயை சக நிர்வாகிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய பாஜக நிர்வாகி பங்கஞ்-ஐ கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.