மகாத்மா காந்தியை கொன்றவர்கள் என்னை விட்டுவிடுவார்களா?; சித்தராமையா பரபரப்பு பேட்டி
மகாத்மா காந்தியை கொன்றவர்கள் என்னை விட்டு விடுவார்களா? என்று சித்தராமையா கூறினார்.
சிக்கமகளூரு:
மகாத்மா காந்தியை கொன்றவர்கள் என்னை விட்டு விடுவார்களா? என்று சித்தராமையா கூறினார்.
சித்தராமையா
சிவமொக்காவில் கடந்த 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது வீரசாவர்க்கர் உருவப்படம் அடங்கிய பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதை ஒரு தரப்பினர் அகற்றியதால் பதற்றம் ஏற்பட்டது. இதனால் இருதரப்பினர் இடையே மோதல் உருவானது. அதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். இந்த நிலையில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் பகுதியில் எதற்காக வீரசாவர்க்கர் படத்தை வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி விமர்சித்தார்.
இதனால் பா.ஜனதாவினர் மற்றும் பஜ்ரங்தள, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் சித்தராமையாவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
முட்டை வீச்சு
நேற்று முன்தினம் குடகு மாவட்டத்திற்கு சென்று சித்தராமையாவின் கார் மீது பா.ஜனதாவினர் முட்டை வீசினர். நேற்று சிக்கமகளூருவுக்கு சென்ற சித்தராமையாவுக்கு எதிராக பா.ஜனதாவினர் கருப்பு கொடி காட்டினர். மேலும் அவரது கார் மீது கருப்பு கொடியை வீசினர். மேலும் காங்கிரசாருடன் மோதலிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனக்கு எதிராக நடக்கும் போராட்டம் மற்றும் என் கார் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் கர்நாடகத்தை ஆளும் பா.ஜனதா அரசால் அரங்கேற்றப்பட்டது. இதன் பின்னணியில் மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவின் ஆதரவாளர்களும், அவர்கள் சார்ந்த அமைப்பும் உள்ளது.
போராட்டம்
திதிமதியில் எனக்கு எதிராக 10 இளைஞர்கள் கோஷமிட்டனர். சிக்கமகளூருவில் 4 இடங்களில் பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பினர் திரண்டிருந்தனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தவில்லை. முதல்-மந்திரி வந்தால் அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட போலீசார் அனுமதிப்பார்களா?. ஏன் அவர்களை போலீசார் முன்கூட்டியே கைது செய்யவில்லை. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவனம் செலுத்தாதது ஏன்?.
எனக்கு எதிராக செயல்படும் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள, சங்க் பரிவார் ஆகிய அமைப்புகளுடன் போலீஸ் சூப்பிரண்டு கைகோர்த்துள்ளார். அவர்கள் போராட்டம் நடத்த போலீஸ் சூப்பிரண்டே அனுமதித்துள்ளார். இது மாநில அரசால் நடத்தப்பட்ட போராட்டம்.
சட்டம் - ஒழுங்கு செத்துவிட்டது
எனக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பது அரசின் வேலை. அதை அரசு செய்ய தவறி விட்டது. மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. இது ஒரு மோசமான ஊழல் அரசு. கர்நாடகத்தில் அரசும், சட்டமும் - ஒழுங்கும் செத்துவிட்டது. எனக்கு சாவர்க்கர் மீது தனிப்பட்ட முறையில் எந்த ஒரு விரோதமோ, கோபமோ இல்லை. அவரும் ஒரு மனிதர் தான். ஆனால் அவரது கொள்கைகளை நான் எதிர்க்கிறேன்.
எனக்கு எதிராக போராடியவர்கள் சாவர்க்கரின் உருவப்படங்களை கைகளில் ஏந்தி உள்ளனர். ஆங்கிலேயர்களை எதிர்த்து நிற்காமல் தன்னை மன்னித்துவிடும்படி கேட்ட சாவர்க்கரை இவர்கள் வீரசாவர்க்கர் என்று கொண்டாடுகிறார்கள். மேலும் மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை போற்றுகிறார்கள். என்னை மட்டும் இவர்கள் விட்டுவிடுவார்களா?.
இவ்வாறு அவர் கூறினார்.