உனகுந்து தொகுதி வேட்பாளரை அறிவித்த சித்தராமையா
டி.கே.சிவக்குமார் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில் உனகுந்து தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை சித்தராமையா அறிவித்து இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு:-
வேட்பாளர்களின் பெயர்கள்
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த எதிர்கொள்ள பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தயாராகி வருகின்றன. யாத்திரைகள், கட்சிக் கூட்டங்களை நடத்தி வரும் இந்த கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் கொப்பல் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசும்போது, அந்த மாவட்டத்தில் 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார். அதற்கு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், "வேட்பாளர்களை அறிவிக்க எனக்கோ அல்லது சித்தராமையாவுக்கோ அதிகாரம் இல்லை. கட்சி மேலிடம் தான் வேட்பாளர்களை அறிவிக்கும்" என்று கூறி இருந்தார்.
சித்தராமையா அறிவிப்பு
இந்த நிலையில் பாகல்கோட்டை மாவட்டம் பெலகால் கிராமத்தில் நேற்று காங்கிரஸ் கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சித்தராமையா கலந்துகொண்டு பேசினார். அப்போது, பாகல்கோட்டை மாவட்டம் உனகுந்து தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை அறிவித்துள்ளார்.
அவர் பேசும்போது, உனகுந்து தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயானந்த் காசப்பன்னவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் என்றும், அவரை தவிா்த்துவிட்டு வேறு யாருக்கு இந்த தொகுதியில் டிக்கெட் வழங்க முடியும் என்றும் கூறினார். மேலும் அவர் இந்த தொகுதியில் 100 சதவீதம் வெற்றி பெறுவது உறுதி என்றும் அவர் கூறினார்.
காங்கிரசில் சலசலப்பு
டி.கே.சிவக்குமார், வேட்பாளர்களை அறிவிக்க சித்தராமையாவுக்கு அதிகாரம் இல்லை என்று ஏற்கனவே கூறிய நிலையில் சித்தராமையா மீண்டும் வேட்பாளரை அறிவித்துள்ள சம்பவம் காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.