கர்நாடக புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா தேர்வு; டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்-மந்திரி பதவி


கர்நாடக புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா தேர்வு; டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்-மந்திரி பதவி
x
தினத்தந்தி 19 May 2023 12:15 AM IST (Updated: 19 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக புதிய முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பதவி ஏற்பு விழா நாளை (சனிக்கிழமை) பெங்களூருவில் கோலாகலமாக நடைபெறுகிறது.

பெங்களூரு:

எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. 13-ந் தேதி நடைபெற்ற ஓட்டு எண்ணிக்கையில் காங்கிரஸ் 135 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து 14-ந் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. மூன்று மேலிட பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கட்சி மேலிடத்திற்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் யாரை முதல்-மந்திரி ஆக்கலாம் என்பது குறித்து எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக கருத்து சேகரிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து 15-ந்தேதி மேலிட பார்வையாளர்கள் டெல்லி சென்றனர். அன்றைய தினமே அதுகுறித்த அறிக்கையை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் தாக்கல் செய்தனர். அன்றைய தினமே சித்தராமையா டெல்லி சென்றார். ஒரு நாள் தாமதமாக டி.கே.சிவக்குமார் 16-ந்தேதி டெல்லி சென்றார். பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதனால் தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்குமாறு சித்தராமையா கேட்டார்.

இழுபறி நிலை

எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பார்க்காமல், கட்சிக்காக உழைத்த தனக்கு காங்கிரஸ் மேலிடம் முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் அடம்பிடித்தார். இரு தரப்பினரையும் அழைத்து பேசிய மல்லிகார்ஜுன கார்கே, பிறகு ராகுல் காந்தியுடனும் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு டி.கே.சிவக்குமாரிடம் துணை முதல்-மந்திரி பதவியை ஏற்குமாறும், முதல்-மந்திரி பதவி சித்தராமையாவுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

இதை ஏற்க டி.கே.சிவக்குமார் மறுத்துவிட்டார். அதைத்தொடர்ந்து டி.கே. சிவக்குமாரை அழைத்து பேசிய ராகுல் காந்தி, கட்சியின் நலன் கருதி துணை முதல்-மந்திரியை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார். அதையும் அவர் நிராகரித்துவிட்டார். இதனால் முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் இழுபறி நிலை நீடித்து வந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம், சித்தராமையா முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும், 18-ந் தேதி அவர் பதவி ஏற்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. அது தொடர்பான அழைப்பிதழும் சமூக வலைத்தளங்களில் வௌியானது. இதையடுத்து கன்டீரவா மைதானத்தில் பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டன.

சோனியா காந்தி பேசினார்

இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறுகையில், "முதல்-மந்திரி யார் என்பது குறித்து நாங்கள் இன்னும் முடிவு எடுக்கவில்லை. இது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்கள் வெறும் வதந்திகளே. புதிய முதல்-மந்திரி யார் என்பதை 18-ந் தேதிக்குள் (நேற்று) முடிவு செய்வோம். புதிய அரசு 3 நாட்களில் அமைக்கப்படும்" என்றார்.

இந்த நிலையில் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்யும் ஆலோசனைகளை காங்கிரஸ் மேலிடம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் இரவு 10 மணிக்கு மேல் டி.கே.சிவக்குமாரை சமாதானப்படுத்தும் பணிகள் மீண்டும் கையில் எடுக்கப்பட்டன. இறுதியாக டி.கே.சிவக்குமாரை சோனியா காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இழுபறி முடிவுக்கு வந்தது

அப்போது சோனியா காந்தி, கட்சியின் நலன் கருதி துணை முதல்-மந்திரி பதவியை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றும், உங்களின் உழைப்பு என்ன என்று கட்சி நன்றாக புரிந்து கொண்டுள்ளது என்றும், உரிய நேரத்தில் உங்களின் விருப்பம் நிறைவேற்றப்படும் என்றும், நான் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்றும் கூறினார்.

இந்த சமாதான பேச்சுவார்த்தை நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது. சோனியா காந்தி பேசியதை அடுத்து அதை டி.கே.சிவக்குமார் ஏற்றுக்கொண்டார். இறுதியாக சோனியா காந்தி தலையிட்டதை தொடர்ந்து 4 நாட்களாக நீடித்து வந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்தது.

முதல்-மந்திரியாக சித்தராமையா தேர்வு

இதையடுத்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் டெல்லியில் நேற்று காலை நடைபெற்ற பத்திரிகையாளர்கள் கூட்டத்தில், கர்நாடக புதிய முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்த முறை ஒரே ஒரு துணை முதல்-மந்திரி பதவி மட்டுமே உருவாக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வுகளுக்கு பிறகு டெல்லியில் நேற்று காலை கே.சி.வேணுகோபால் வீட்டில் சிற்றுண்டி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் கலந்து கொண்டனர். மற்ற காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிற்றுண்டி சாப்பிட்டனர். அதைத்தொடர்ந்து சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் ஒரே காரில் மல்லிகார்ஜூன கார்கே வீட்டிற்கு சென்றனர்.

அங்கு கார்கேவை சந்தித்த அவர்கள், அவருக்கு நன்றி தொிவித்தனர். அவர்களின் இருவரின் கைகளையும் தூக்கி பிடித்து மகிழ்ச்சியை கார்கே பகிர்ந்து கொண்டார். அதன் பிறகு அவர்கள் 2 பேரும் மதியம் 3 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு பெங்களூருவுக்கு வந்தனர். அவா்களுடன் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா உள்ளிட்ட நிர்வாகிகளும் இருந்தனர்.

சட்டசபை காங்கிரஸ் தலைவராக தேர்வு

பெங்களூரு எச்.ஏ.எல். விமானத்தில் இருந்து வழிநெடுகிலும் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு காங்கிரசார் மேளதாளம் முழங்கவும், பட்டாசுகள் வெடித்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்கள் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அங்கு நடந்தது. இதற்கு கட்சி தலைவரான டி.கே.சிவக்குமார் தலைமை தாங்கினார். அந்த கூட்டத்தில், சித்தராமையா சட்டசபை காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

நாளை பதவி ஏற்பு விழா

இதையடுத்து சித்தராமையா தன்னை ஆட்சி அமைக்க அழைக்க கோரி கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து கடிதம் வழங்கினார். உடன் டி.கே.சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர். அதையடுத்து கவர்னரும், சித்தராமையா ஆட்சி அமைக்க அனுமதி வழங்கினார்.

இதைத்தொடர்ந்து சித்தராமையா பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) மதியம் 12.30 மணி அளவில் கோலாகலமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் சித்தராமையாவுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அதுபோல் டி.கே.சிவக்குமாரும் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார். மேலும் 20-க்கும் மேற்பட்ட மந்திரிகளும் பதவி ஏற்க உள்ளனர்.

ஒரே கருத்துடைய தலைவர்கள்

இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன காா்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். அத்துடன் ஒரே கருத்துடைய பிற மாநிலங்களின் தலைவர்களுக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், "கர்நாடக புதிய முதல்-மந்திரி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு ஒரே கருத்துடைய கட்சிகளின் தலைவர்கள், முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். யார்-யார் பங்கேற்பார்கள் என்பது குறித்து பின்னர் தெரிவிக்கிறோம்" என்றார்.

மு.க.ஸ்டாலின்-நிதிஷ்குமாா்

விழாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல், இமாசல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர்சிங் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

மேலும் இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு மல்லிகார்ஜூன கார்கே தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் பாதுகாப்பு

இதையொட்டி பதவி ஏற்பு விழா நடைபெறும் கன்டீரவா ஸ்டேடியத்தில் விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story