பிறரை தூண்டிவிடும் விதமாக முதல்-மந்திரி பேச்சு; எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு
‘பழிக்குப்பழி தீர்க்கப்படும்’ என்று பிறரை தூண்டிவிடும் விதமாக முதல்-மந்திரி பேசினார் என்றும், அதனால்தான் கடலோர மாவட்டங்களில் கொலை சம்பவங்கள் அதிகரித்து இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.
பெலகாவி:
'பழிக்குப்பழி தீர்க்கப்படும்' என்று பிறரை தூண்டிவிடும் விதமாக முதல்-மந்திரி பேசினார் என்றும், அதனால்தான் கடலோர மாவட்டங்களில் கொலை சம்பவங்கள் அதிகரித்து இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.
பெலகாவி சுவர்ண சவுதாவில் நடந்து குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது:-
நிவாரணம் வழங்க வேண்டும்
தட்சிண கன்னடா மாவட்டம் சூரத்கல்லில் ஜலீல் என்ற வியாபாரி கொலை செய்யப்பட்டு இருக்கிறார். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எப்போதெல்லாம் மங்களூருவுக்கு செல்கிறாரோ, அப்போதெல்லாம் அங்கு கொலை நடக்கிறது. இதற்கு முன்பு மங்களூருவில் இந்து அமைப்பை சேர்ந்தவர் கொலை செய்யப்பட்ட போது, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சென்று குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். நிவாரணமும் வழங்கி இருந்தார்.
முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர் கொலை செய்யப்பட்டால், அரசு நிவாரணம் வழங்குவதில்லை. எதற்காக அரசு பாரபட்சமாக செயல்படுகிறது. அவர்களுக்கு நிவாரணம் கொடுக்க கூடாது என்று சொல்லவில்லை. முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர் கொலை செய்யப்பட்டாலும், அதற்கு நிவாரணம் வழங்கும்படி தான் கூறுகிறேன்.
தூண்டி விடும் பேச்சே காரணம்
மங்களூருவுக்கு கடந்த முறை முதல்-மந்திரி சென்றிருந்த போது, பழிக்குப்பழி தீர்க்கப்படும் என்று பிறரை தூண்டி விடும் விதமாக பேசி இருந்தார். முதல்-மந்திரியின் இந்த தூண்டி விடும் விதமான பேச்சே கடலோர மாவட்டங்களில் தொடர் கொலைகள் நடப்பதற்கு காரணம். பஜ்ரங்தள் உள்ளிட்ட அமைப்புகள் சட்டத்தை கையில் எடுத்து செயல்படுகிறார்கள். சட்டத்தை மீறுகின்றனர்.
சட்டத்தை கையில் எடுப்போர் மீது உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.