கர்நாடக அரசு செத்து போய்விட்டது; சித்தராமையா கடும் தாக்கு
மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என்றும், கர்நாடக அரசு செத்து போய்விட்டது என்றும் சித்தராமையா கடுமையாக தாக்கி பேசினார்.
மைசூரு:
மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என்றும், கர்நாடக அரசு செத்து போய்விட்டது என்றும் சித்தராமையா கடுமையாக தாக்கி பேசினார்.
அறுகதை இல்லை
முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா, தனது மகன் ராகேசின் 6-வது ஆண்டு நினைவு நாளில் கலந்துகொள்வதற்காக மைசூருவுக்கு வந்தார். மைசூரு விமான நிலையத்தில் வைத்து சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தட்சிண கன்னடா மாவட்டத்தில் நடந்துள்ள கொலை தொடர்பாக அரசு எந்த கடினமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் உள்ளது. இந்த கொலைகளுக்கான பொறுப்பை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும், போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவும் தான் ஏற்க வேண்டும். கடலோர மாவட்டங்களில் அடிக்கடி கொலை, வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனை கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசு உள்ளது. இதனால் பசவராஜ் பொம்மையும், அரக ஞானேந்திராவும் பதவியில் இருப்பதற்கு அறுகதை இல்லாதவர்கள்.
அரசு செத்து போய்விட்டது
கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து இருப்பது பற்றி பல முறை தெரிவித்துள்ளேன். ஆனாலும் இந்த அரசு விழித்து கொள்ளவில்லை. இதனால் தான் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டிருக்கிறது. இந்த கொலை சம்பவங்களுக்கு பொறுப்பேற்று பசவராஜ் பொம்மையும், அரக ஞானேந்திராவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு செல்ல வேண்டும். மாநிலத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. சட்டம்-ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளது. மக்கள் பயத்துடன் வசிக்கும் நிலை உருவாகி உள்ளது. மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.
பசவராஜ் பொம்மை எதுவும் செய்ய முடியாமல் உள்ளார். மாநிலத்தில் அரசே இல்லை. கர்நாடக அரசு செத்து போய்விட்டது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தட்சிண கன்னடாவில் இருக்குபோதே மற்றொரு கொலை நடந்துள்ளது. அப்போது மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு என்ன நிலைமையில் உள்ளது என்பதை பாருங்கள்.
உ.பி. மாடல் ஆட்சி
உத்தரபிரதேச மாடல் ஆட்சிைய கர்நாடகத்தில் அமல்படுத்துவதாக பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். ஏற்கனவே கர்நாடகத்தில், உத்தரபிரதேச, பீகார் மாநில மாடல் ஆட்சி தான் நடக்கிறது. அந்த மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கே இல்லாமல் உள்ளது. அதுபோல் தான் கர்நாடகத்திலும் சட்டம்-ஒழுங்கு இல்லாமல் இருக்கிறது.
முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள் தேவையில்லாத விஷயங்கள் பேசுவதை நிறுத்திவிட்டு பொதுமக்களையும், பொது சொத்துகளையும் பாதுகாக்க வேலை செய்யுங்கள். கொலை குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு சட்டப்படி தக்க தண்டனை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.