தேவேகவுடாவுடன் சித்தராமையா திடீர் சந்திப்பு
தேவேகவுடாவை சித்தராமையா திடீரென சந்தித்து பேசி உடல்நலம் விசாரித்தார்.
பெங்களூரு: முன்னாள் பிரதமரும், ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருக்கிறார். உடல் ஒத்துழைப்பு வழங்காததால் அவர் கட்சி கூட்டங்கள் உள்பட எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது இல்லை. சமீபத்தில் நடைபெற்ற ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் அவர் விதான சவுதாவில் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்துவிட்டு சென்றார்.
இந்த நிலையில் தேவேகவுடாவை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா நேற்று இரவு நேரில் சந்தித்து பேசினார். அப்போது தேவேகவுடாவிடம் அவர் நலம் விசாரித்தார். தேவேகவுடாவுக்கும், சித்தராமையாவுக்கும் அரசியல் ரீதியாக கடுமையான கருத்து வேறுபாடுகள் உண்டு. சமீபகாலமாக தேவேகவுடா குறித்து விமர்சனம் செய்வதை சித்தராமையா நிறுத்தியுள்ளார். அரசியலில் தேவேகவுடா சித்தராமையாவுக்கு குரு என்பது குறிப்பிடத்தக்கது.