சித்தராமையாவுக்கு 'ராடோ' கைக்கெடிகாரம் பரிசளித்த மனைவி


சித்தராமையாவுக்கு ராடோ கைக்கெடிகாரம் பரிசளித்த மனைவி
x

2-வது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்றிருப்பதால் சித்தராமையாவுக்கு, அவரது மனைவி விலையுயர்ந்த ‘ராடோ’ கைக்கெடிகாரத்தை பரிசாக வழங்கி இருக்கிறார்.

பெங்களூரு:-

'ராடோ' கைக்கெடிகாரம் பரிசு

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல்-மந்திரியாக சித்தராமையா பதவி ஏற்றுக் கொண்டு இருந்தார். ஏற்கனவே கடந்த 2013-18-ம் ஆண்டு தொடர்ந்து 5 ஆண்டுகள் அவர் முதல்-மந்திரியாக இருந்தார். நேற்று முன்தினம் அவர், 2-வது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்று இருந்தார். சித்தராமையா 2-வது முறையாக முதல்-மந்திரியாகி இருப்பதை, காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில், 2-வது முறையாக முதல்-மந்திரியாகி உள்ள சித்தராமையாவுக்கு, அவரது மனைவி பார்வதி விலை உயர்ந்த 'ராடோ' கைக்கெடிகாரத்தை பரிசாக வழங்கி இருக்கிறார். பெரும்பாலும் சித்தராமையாவின் மனைவியை பொது நிகழ்ச்சிகளிலேயோ, வேறு எந்த இடங்களிலும் பார்க்க முடியாது. தனது மனைவி கைக்கெடிகாரம் பரிசளித்திருப்பதை சித்தராமையா பெருமையாக நினைத்து வருகிறார்.

மனைவியின் அன்பு பரிசு

ஏனெனில் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று ராஜீவ்காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், சித்தராமையா, டி.கே.சிவக்குமார், எம்.பி.பட்டீல் பங்கேற்றனர். பின்னர் மேடையில் அமர்ந்திருந்த சித்தராமையா தனது மனைவியின் அன்பு பரிசான கைக்கெடிகாரத்தையே பார்த்தபடி இருந்தார்.

அத்துடன் அருகில் இருந்த மந்திரி எம்.பி.பட்டீலிடமும் தனது மனைவி கைக்கெடிகாரத்தை பரிசாக அளித்ததாக கூறி சித்தராமையா பெருமைப்பட்டு கொண்டார். உடனே சித்தராமையாவின் கையை பிடித்து, அந்த கைக்கெடிகாரத்தை எம்.பி.பட்டீலும் பார்த்தார். அந்த சந்தர்ப்பத்தில் அருகில் இருந்த டி.கே.சிவக்குமாரும் குறுக்கிட்டு சித்தராமையாவின் கையை பிடித்து கைக்கெடிகாரத்தை பார்த்தார்.

கடந்த ஆட்சியில் சர்ச்சை

இதுபற்றி மந்திரி எம்.பி.பட்டீல் நிருபர்களிடம் கூறுகையில், 'முதல்-மந்திரி சித்தராமையா தனது மனைவி அன்பு பரிசாக கைக்கெடிகாரத்தை அளித்திருப்பதாக மிகுந்த உற்சாகத்துடன் என்னிடம் கூறினார். உடனே அன்பு மனைவி பரிசளித்த அந்த கைக்கெடிகாரத்தை கையில் இருந்து எப்போதும் கழற்றி விடாதீர்கள் என்று முதல்-மந்திரியிடம் கூறினேன்' என்றார்.

கடந்த 2016-ம் ஆண்டு சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்த போது விலை உயர்ந்த கைக்கெடிகாரம், அவருக்கு பரிசாக கிடைத்திருந்தது. அந்த கைக்கெடிகாரம் ரூ.70 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இருக்கும் என்று கூறப்பட்டது. அதை வைத்து பா.ஜனதாவினர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்கள். ஊழல் தடுப்பு படையில் சித்தராமையா மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பிறகு, அந்த விலை உயர்ந்த கைக்கெடிகாரத்தை அரசிடமே சித்தராமையா ஒப்படைத்திருந்தது கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story