சிசோடியா கைது விவகாரம்: பா.ஜ.க. அரசை கடுமையாக சாடி கெஜ்ரிவால் உள்பட 9 எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்


சிசோடியா கைது விவகாரம்: பா.ஜ.க. அரசை கடுமையாக சாடி கெஜ்ரிவால் உள்பட 9 எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்
x

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிசோடியா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் கெஜ்ரிவால் உள்பட 9 எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.



புதுடெல்லி,


டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவுக்கு சி.பி.ஐ. அனுப்பிய சம்மனை ஏற்று, கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 26-ல்) டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு சிசோடியா நேரில் ஆஜரானார்.

அவரிடம் 8 மணி நேரத்திற்கு மேல் நடந்த விசாரணை முடிவில், சிசோடியாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரை 4-ந்தேதி (நேற்று) வரை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

அவரது காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் இருந்து சிசோடியாவை அதிகாரிகள் டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, சிசோடியாவின் சி.பி.ஐ. காவல் 6-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க.வை சேர்ந்த மாடால் விருபாக்ஷப்பா எம்.எல்.ஏ.வின் மகன் பிரசாந்த் லஞ்ச வழக்கில் சிக்கியுள்ளார். டெண்டரில் பங்கேற்கும் ஒப்பந்ததாரர் ஒருவரிடம், ரூ.80 லட்சம் லஞ்சம் கேட்டு, அவற்றில் முதல் தவணையாக ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கும்போது பிரசாந்த் உள்பட 5 பேர் லோக் அயுக்தாவிடம் சிக்கினர்.

ரூ.40 லட்சம் லஞ்ச விவகாரம் என நினைத்து எம்.எல்.ஏ.வின் மகன் வீடு, அலுவலகத்தில் லோக் அயுக்தா போலீசார் நடத்திய சோதனையில், கட்டுக்கட்டாக ரூ.8 கோடி பணம் சிக்கியது போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தது.

இதுபற்றி டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் நேற்று கூறும்போது, அவர்களது மந்திரிகளில் ஒருவரின் மகனிடம் ரூ.8 கோடி பதுக்கி வைக்கப்பட்டு உள்ளது என கண்டறியப்பட்டு உள்ளது. ஆனால், அவரை இன்னும் கைது செய்யவில்லை.

ஒருவேளை அவருக்கு அடுத்த ஆண்டில், அவர்கள் பத்ம பூஷண் விருது வழங்கலாம். மந்திரியின் மகனிடம் இருந்து ரூ.8 கோடி கண்டெடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், மணீஷ் சிசோடியாவை கைது செய்து இருக்கிறார்கள்.

அவர்கள் சிசோடியாவை ஊழல் செய்தவர் என கூறினார்கள். ஆனால், சிசோடியாவிடம் நடந்த சோதனையில், ரூ.10 ஆயிரம் மட்டுமே அவரிடம் இருந்து உள்ளது. சிசோடியாவின் வங்கி லாக்கரில் கூட எதுவும் கண்டறியப்படவில்லை என டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறினார்.

இந்நிலையில், சிசோடியா விவகாரத்தில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் உள்பட 9 எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

கெஜ்ரிவால் தவிர, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா, தேசியவாத கட்சி தலைவர் சரத் பவார், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, உத்தர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் என எதிர்க்கட்சிகளை சேர்ந்த 9 தலைவர்களின் பெயர் அந்த கடிதத்தில் கையொப்பமிடும் பகுதியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதில், டெல்லி முன்னாள் முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. டெல்லி பள்ளி கல்வியை உருமாற்றியதற்காக உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த கடிதத்தில், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பா.ஜ.க.வில் இணைந்த பின்னர், அவர்கள் மீதுள்ள வழக்குகள் மீது விசாரணை மெதுவாக நடக்கிறது என சுட்டி காட்டியுள்ளதுடன், எடுத்துக்காட்டாக, முன்னாள் காங்கிரஸ் உறுப்பினராக இருந்து, தற்போது பா.ஜ.க. ஆளும் அசாமின் முதல்-மந்திரியாக உள்ள ஹிமந்தா பிஸ்வா சர்மா மீது சாரதா சிட்பண்டு வழக்கில் 2014 மற்றும் 2015-ம் ஆண்டில் சி.பி.ஐ., அமலாக்க துறை விசாரணை நடந்தது.

பா.ஜ.க.வில் சேர்ந்த பின்னர் அந்த வழக்கில் முன்னேற்றம் காணப்படவில்லை. இதே நிலை, அக்கட்சியில் சேர்ந்த முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களான சுவேந்து அதிகாரி, முகுல் ராய் ஆகியோருக்கும் உள்ளது. நாரதா ஸ்டிங் ஆப்பரேசனில் அமலாக்க துறை மற்றும் சி.பி.ஐ. கண்காணிப்பு வளையத்தின் கீழ் வந்த அவர்களின் வழக்கில் முன்னேற்றம் காணப்படவில்லை.

மராட்டியத்தின் நாராயண் ரானே உள்பட இதுபோன்ற பல எடுத்துக்காட்டுகள் உள்ளன என அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளது. நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக போர் தொடுக்கப்பட்டு உள்ளது.

ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளில் கவர்னர்களின் தலையீடு காணப்படுகிறது. தமிழகம், மராட்டியம், மேற்கு வங்காளம், பஞ்சாப், தெலுங்கானா அல்லது டெல்லி துணைநிலை கவர்னர் ஆகட்டும். பா.ஜ.க ஆளாத மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான விரிவான மோதல் போக்கிற்கு அடையாளம் ஆக அவர்கள் காணப்படுகின்றனர்.

ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி முறைக்கு அச்சுறுத்தல் விடப்பட்டு உள்ளது. ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் தீர்ப்பே இறுதியான ஒன்றாக உள்ளது. உங்களுடன் முரண்பட்ட கொள்கையை கொண்ட ஒரு கட்சியாக இருந்தாலும், மக்கள் அவர்களுக்கு ஆதரவாக அளித்த தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும்.

நாம் ஜனநாயக நாடு என்பதில் இருந்து சர்வாதிகார போக்கிற்கு மாறி கொண்டிருக்கிறோம் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.



Next Story