ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ. விலகல்; காங்கிரசில் சேருகிறார்
ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த மேலும் ஒரு எம்.எல்.ஏ. பதவி விலகியுள்ளார். அரிசிகெரே தொகுதியை சேர்ந்த சிவலிங்கேகவுடா ராஜினாமா செய்துள்ளார்.
பெங்களூரு:
ராஜினாமா செய்தனர்
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தேர்தலை எதிர்கொள்ள ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் கட்சி 124 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கட்சிகளில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக விலகி வருகிறார்கள். ஏற்கனவே பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.சி.க்கள் புட்டண்ணா, பாபுராவ் சின்சனசூர் மற்றும் என்.ஒய்.கோபாலகிருஷ்ணா எம.எல்.ஏ. ஆகியோரும், ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.சீனிவாஸ், ஏ.டி.ராமசாமி ஆகியோர் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
சிவலிங்கேகவுடா
இந்த நிலையில் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த மேலும் ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்துள்ளார். அதாவது ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தொகுதி எம்.எல்.ஏ. சிவலிங்கேகவுடா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார். அவர் சிர்சியில் சபாநாயகர் காகேரியை அவரது வீட்டில் நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதன் மூலம் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் 3 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியுள்ளனர்.
ஏற்கனவே ஏ.டி.ராமசாமி பா.ஜனதாவிலும், எஸ்.ஆர்.சீனிவாஸ் காங்கிரசிலும் சேர்ந்து விட்டனர். இந்த நிலையில் சிவலிங்கேகவுடா காங்கிரசில் சேர்ந்து அரிசிகெரே தொகுதியில் போட்டியிட உள்ளார்.