சிவமொக்கா விமான நிலையம் வருகிற 27-ந்தேதி திறப்பு


சிவமொக்கா விமான நிலையம் வருகிற 27-ந்தேதி திறப்பு
x

சிவமொக்கா விமான நிலையம் வருகிற 27-ந்தேதி திறக்கப்படுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார் என்று கலெக்டர் செல்வமணி தெரிவித்துள்ளார்.

சிவமொக்கா:-

சிவமொக்கா விமான நிலையம்

சிவமொக்கா நகர் சோகானே பகுதியில் புதிதாக விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலைய கட்டுமான பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவுக்கு காத்திருக்கிறது. இந்த விமான நிலைய திறப்பு விழாவில் கலந்துகொள்ளும்படி பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்வதாக அவரும் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த நிலையில், சிவமொக்கா கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் செல்வமணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார், சிவமொக்கா எம்.பி. ராகவேந்திரா, முன்னாள் மந்திரி ஈசுவரப்பா உள்பட பலர் கலந்துகொண்டனர்.பின்னர் அவர்கள் சோகானே பகுதிக்கு சென்று இறுதிக்கட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பிரதமர் மோடி

பின்னர் கலெக்டர் செல்வமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சிவமொக்கா சோகானே விமான நிலைய பணிகள் முழுமையாக முடிவடைந்து விட்டன. இந்த விமான நிலைய திறப்பு விழா வருகிற 27-ந்தேதி நடக்க உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு விமான நிலையத்தை திறந்து வைக்க உள்ளார். அவருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்வதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.விமான நிலையம் மட்டுமல்லாமல், சிவமொக்கா-சிகாரிப்புரா-ராணிபென்னூர் இடையே புதிய ரெயிலையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

.....


Next Story