மும்பையில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் புதுப்பிக்கபட்ட சதுக்கம் திறப்பு...!
மும்பையில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் புதுப்பிக்கப்பட்ட சதுக்கம் திறக்கப்பட்டது.
மும்பை,
"தினத்தந்தி"யின் மறைந்த அதிபர் பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர். பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்த அவர், விளையாட்டு, கல்வி, ஆன்மிகம் போன்ற துறைகளிலும் இமாலய சாதனை படைத்தவர்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் சாதனைகளை போற்றும் வகையில் அவரது நினைவாக கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 29-ந் தேதி மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி சயான் - பாந்திரா இணைப்பு சாலையில் சதுக்கம் அமைக்கப்பட்டது.
சதுக்கத்தை அப்போதைய மும்பை மாநகராட்சி மேயர் சினேகல் அம்பேகர் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் தெலுங்கானா கவர்னராக உள்ள தமிழிசை சவுந்திரராஜன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சயான் கோலிவாடா சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சதுக்கம் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட சதுக்கத்தை நேற்று மாலை நடந்த விழாவில் தாராவி எம்.எல்.ஏ. வர்ஷா கெய்க்வாட் திறந்து வைத்தார். இதைதொடர்ந்து தாராவியில் உள்ள காமராஜர் பள்ளியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் வளாகத்தில் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் மக்கள், தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.