மடாதிபதி குறித்து சமூகவலைத்தளத்தில் அவதூறு கருத்து: வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை


மடாதிபதி குறித்து சமூகவலைத்தளத்தில் அவதூறு கருத்து:  வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
x

மடாதிபதி குறித்து சமூகவலைத்தளத்தில் அவதூறாக கருத்து வெளியிட்ட வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிருங்கேரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சிக்கமகளூரு;

அவதூறு கருத்து

சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரியில் பிரசித்தி பெற்ற சாரதா அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் பாரதிய தீர்த்த சங்கராச்சாரியார் ஆவார்.

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் மடாதிபதி குறித்து சமூகவலைத்தளத்தில் மர்மநபர் அவதூறு கருத்து பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த சங்கராச்சாரியாரின் பக்தர் ஒருவர், சிருங்கேரி போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மா்மநபரை வலைவீசி தேடிவந்தனர். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் மடாதிபதி சங்கராச்சாரியார் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டது உப்பள்ளியை சேர்ந்த முன்னா அஜார்(வயது 30) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

3 ஆண்டு சிறை

இதுதொடர்பான வழக்கு விசாரணை சிருங்கேரி கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்றுமுன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது.


வழக்கை விசாரித்த நீதிபதி தாசரிகாந்த், முன்னா அஜார் மீதான குற்றம் நிரூபணமானதால் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


Next Story