கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்ந்த மனைவி கழுத்து அறுத்து படுகொலை; தனியார் நிறுவன ஊழியர் கைது
கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்ந்த மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
ஹெண்ணூர்:
கொல்கத்தாவை சேர்ந்தவர்
கொல்கத்தாவை சேர்ந்தவர் சேக் சுகைல். இவர் பெங்களூருவில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தாப்சிம் பாபியன். இந்த தம்பதிக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதி பெங்களூரு சரியாபாளையா பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர். இதற்கிடையே தாப்சிம் பாபியனுக்கும், அதே பகுதியை சேர்ந்த நதீம் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இதுகுறித்து சேக் சுகைலுக்கு தெரியவந்தது. உடனே அவர் கள்ளக்காதலை கைவிடுமாறு தனது மனைவியை கண்டித்தார். இதனால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கள்ளக்காதலை கைவிட தாப்சிம் பாபியன் மறுத்துள்ளார். இதையடுத்து தாப்சிம் பாபியனை கொல்கத்தாவுக்கு சேக் சுகைல் அழைத்து சென்றார். எனினும், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கொலை
இதனால் மனமுடைந்த தாப்சிம் பாபியன், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் பெங்களூருவுக்கு வந்தார். பெங்களூரு ஹெண்ணூர் பகுதியில் அவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து வசித்து வந்தார். இதையடுத்து அவர்களுக்கு 2½ வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இதுகுறித்து சேக் சுகைலுக்கு தெரியவந்தது.
உடனே அவர் தனது மனைவியை தேடி பெங்களூருவுக்கு வந்தார். பின்னர், சம்பவத்தன்று தனது மனைவியை சந்தித்த சேக் சுகைல், தகராறு செய்துள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சேக் சுகைல் தனது மனைவி தாப்சிம் பாபியனை கழுத்தை அறுத்து படுகொலை செய்தார்.
வழக்குப்பதிவு
மேலும் கள்ளக்காதலனுக்கு பிறந்த குழந்தையையும், சேக் சுகைல் தாக்கி உள்ளார். இதுகுறித்து ஹெண்ணூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தாப்சிம் பாபியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தனது மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்ந்ததால் ஆத்திரத்தில் அவரை சேக் சுகைல் கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து சேக் சுகைலை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.