உத்தர பிரதேச மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள்; பட்ஜெட்டில் ரூ.3,600 கோடி ஒதுக்கீடு
உத்தர பிரதேசத்தில் மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் அல்லது டேப்லட்டுகள் வழங்க பட்ஜெட்டில் ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் முதல்-மந்திரி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசில், மாநில நிதி மந்திரி சுரேஷ் கன்னா சட்டசபையில் இன்று 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார்.
இந்த பட்ஜெட்டின் மொத்த மதிப்பு ரூ.6.90 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டது. கடந்த 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டின் திட்ட மதிப்பீடு ரூ.6.15 லட்சம் கோடியாக இருந்தது. அதனை விட இந்த முறை ரூ.75 ஆயிரம் கோடி கூடுதலாக திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த பட்ஜெட்டில் சுவாமி விவேகானந்தர் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் அல்லது டேப்லட்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இதேபோன்று ஜலஜீவன் திட்டத்திற்கு ரூ.25,350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு இது ரூ.19,500 கோடியாக இருந்தது. இந்த திட்டத்தின்படி, அனைத்து 2.26 கோடி வீடுகளுக்கும் குழாய் வழி குடிநீரை வழங்குவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.