திருப்பதியில் ஒரே நாளில் இவ்வளவு கோடி வசூலா? - வரலாற்றில் தடம் பதித்த உண்டியல் காணிக்கை


ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தான வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூ.6.18 கோடி காணிக்கை கிடைத்துள்ளது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். வார விடுமுறை நாள் என்பதால் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். அதேபோன்று வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தி வருகிறார்கள்.

கோடை விடுமுறை முடிவடைந்த நிலையிலும் ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களின் கூட்டம் குறையவில்லை. வார விடுமுறை என்பதால் ஏழுமலையான் கோவிலில் நேற்றும் இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இலவச தரிசனத்திற்காக 15 மணி நேரமும் சிறப்பு தரிசனத்திற்காக 5 மணி நேரமும் பக்தர்கள் காத்திருந்தனர்.

வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகள் பக்தர்களால் நிரம்பியது. சனிக்கிழமையன்று ஒரே நாளில் மட்டும் 88 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்தனர்.

இந்தநிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தான வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூ.6.18 கோடி காணிக்கை கிடைத்துள்ளது. இதற்கு முன்னர் 2012ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி பக்தர்கள் செலுத்திய ரூ. 5.73 கோடியே அதிகபட்ச காணிக்கையாக இருந்தது என திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story