'நேஷனல் ஹெரால்டு' வழக்கு அமலாக்கப்பிரிவுக்கு சோனியா காந்தி கடிதம்


நேஷனல் ஹெரால்டு வழக்கு அமலாக்கப்பிரிவுக்கு சோனியா காந்தி கடிதம்
x

பூரண குணம் அடையும் வரை நேரில் ஆஜராகி விசாரணை நடத்துவதை தள்ளிவைக்க வேண்டும் என்று கேட்டு அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்துக்கு சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.

புதுடெல்லி,

நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை மேம்படுத்துவதற்காக அதன் பதிப்பு நிறுவனமான 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' காங்கிரஸ் கட்சியிடம் ரூ.90 கோடி வட்டியில்லா கடன் வாங்கியது. அதை திருப்பி செலுத்தாத நிலையில், 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' நிறுவனத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகன் ராகுல் காந்தி உள்ளிட்டோரை இயக்குனர்களாக கொண்ட 'யங் இந்தியா' நிறுவனம் கையகப்படுத்தியது.

இதன் மூலம் 'அசோசியேட்டட் ஜர்னல்' நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை 'யங் இந்தியா' அபகரித்து விட்டது என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடுத்து அது டெல்லி கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

அமலாக்கப்பிரிவு விசாரணை

இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் விசாரணை நடத்துகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன்குமார் பன்சால் ஆகியோரிடம் விசாரணை நடத்திய நிலையில் ராகுல் காந்தியிடமும் 50 மணி நேரத்துக்கு மேலாக தொடர் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா கடந்த 8-ந் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவருக்கு கடந்த 2-ந் தேதி கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு, டெல்லி சர் கங்காராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 3 வார காலம் அவகாசம் கேட்டார். அவர் இன்று (23-ந் தேதி) ஆஜராக புதிய சம்மன் வழங்கப்பட்டது.

ஒத்தி போட கடிதம்

ஆனால் சோனியா காந்தி ஆஸ்பத்திரியில் இருந்து கடந்த திங்கட்கிழமை மாலை 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டிருந்தாலும், அவர் வீட்டில் தொடர்ந்து ஓய்வில் இருக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றில் இருந்தும், நுரையீரல் தொற்றில் இருந்தும் பூரண குணம் அடைகிற வரையில், தான் நேரில் ஆஜராகி விசாரணை நடத்துவதை ஒத்தி போட வேண்டும் என்று சோனியா காந்தி, அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்துக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இந்த தகவலை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று டுவிட்டரில் பதிவில் தெரிவித்துள்ளார்.


Next Story