இந்தியாவின் உதவியால் இலங்கையின் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்த்துவிட்டது - இலங்கை மந்திரி


இந்தியாவின் உதவியால் இலங்கையின் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்த்துவிட்டது - இலங்கை மந்திரி
x

மோடி தலைமையிலான இந்திய அரசின் உதவியால் இலங்கையின் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்த்துவிட்டது என இலங்கை மந்திரி கூறினார்.

மும்பை,

இலங்கையில் கடந்த ஆண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இந்த போராட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தீவிரமடைந்ததையடுத்து அப்போது அதிபராக இருந்த கோத்தபயா ராஜபக்சே உடனடியாக பதவி விலகி நாட்டை விட்டு தப்பிச்சென்றார்.

இதனை தொடர்ந்து இலங்கை புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார். மேலும், பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருந்த நாட்டை மீட்க இலங்கை இந்திய அரசிடம் உதவிகேட்டது. இதையடுத்து, இலங்கை அரசுக்கு இந்தியா பல கோடி ரூபாய் கடனுதவி வழங்கியது. எரிபொருள், உணவுப்பொருள் என பல்வேறு உதவிகளை இந்திய அரசு வழங்கியது.

கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்த இலங்கை தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

இந்நிலையில், மோடி தலைமையிலான இந்திய அரசின் உதவியால் இலங்கை பெரும்பாலான பிரச்சினைகளை தீர்த்துவிட்டதாக இலங்கை நீதித்துறை மந்திரி விஜயதாச ராஜபக்சே தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று நடைபெற்ற அமைதி மாநாட்டில் பங்கேற்ற ராஜபக்சே செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசின் உதவியுடன் நாங்கள் எங்கள் பெரும்பாலான பிரச்சினைகளை தீர்த்துவிட்டோம். இலங்கையில் மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவருவோம் என நாங்கள் நம்புகிறோம்' என்றார்.


Next Story