பெங்களூருவில் மாநில அறிவியல் கண்காட்சி; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று தொடங்கி வைக்கிறார்
பெங்களூருவில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
பெங்களூரு:
சமூக நலத்துறை முதன்மை செயலாளர் மணிவண்ணன் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
அறிவியல் ஆற்றல்
கர்நாடக உண்டு உறைவிட பள்ளிகள் சங்கம் சார்பில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நாளை (இன்று) தொடங்குகிறது. இந்த கண்காட்சியை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை காலை 9.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். அதன் பிறகு அவர் கண்காட்சியை பார்வையிடுகிறார். 2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் உண்டு உறைவிட பள்ளிகளின் மாணவர்கள், அறிவியல், கணிதம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்களின் திறனை வெளிப்படுத்தும் காட்சிகளை வைத்துள்ளனர்.
200 உண்டு உறைவிட பள்ளிகளை சேர்ந்த 1,500 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் அறிவியல் ஆற்றலை வெளிப்படுத்த உள்ளனர். மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து, உணவு, தங்கு வசதிகளை நாங்கள் செய்து கொடுத்துள்ளோம். இந்த கண்காட்சியை வெற்றிகரமாக நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளோம். இந்திய ராணுவமும் இந்த கண்காட்சியில் பங்கேற்கிறது.
நவீன ஆயுதங்கள்
ராணுவத்தின் நவீன ஆயுதங்கள் இடம் பெற உள்ளன. மூத்த ராணுவ அதிகாரிகள் ராணுவத்தின் தகவல்களை மாணவர்களிடம் எடுத்து கூறுவார்கள். இஸ்ரோ, பாரத ஞான விகான சமிதி, நேரு கோளரங்கம், விஸ்வேசுவரய்யா அருங்காட்சியகம் போன்ற பல்வேறு அறிவியல் சார்ந்த அமைப்புகளும் கலந்து கொள்கின்றன. இஸ்ரோ, செயற்கைக்கோள்கள், ராக்கெட் உள்ளிட்டவற்றை அங்கு பார்வைக்கு வைக்கும்.
எச்.ஏ.எல். நிறுவனம் விமானம், ஹெலிகாப்டர்களின் மாதிரிகளை அங்கு வைக்க உள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு கண்காட்சியை காண்பார்கள். இந்த கண்காட்சியை காண பொதுமக்களுக்கு இலவசமாக அனுமதி அளிக்கப்படுகிறது. அதனால் குழந்தைகளை பெற்றோர் கண்காட்சிக்கு அழைத்து வர வேண்டும். இதன் மூலம் மாணவர்களிடையே அறிவியல் மனநிலையை ஏற்படுத்த முடியும்.
இவ்வாறு மணிவண்ணன் கூறினார்.