பெங்களூரு விதான சவுதாவில் பசவண்ணர், கெம்பேகவுடா சிலைகள்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அடிக்கல் நாட்டினார்
பெங்களூரு விதான சவுதாவில் பசவண்ணர், கெம்பேகவுடா சிலைகள் அமைப்பதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அடிக்கல் நாட்டினார்.
பெங்களூரு:
பசவண்ணர்-கெம்பேகவுடா
பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் சமூக புரட்சியாளர் பசவண்ணர் (பசவேஸ்வரா), பெங்களூரு நகரை நிர்மாணித்த கெம்பேகவுடா ஆகியோருக்கு சிலை நிறுவப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி விதான சவுதா வளாகத்தில் பசவண்ணர், கெம்பேகவுடா சிலைகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, சிலைகள் அமைக்க அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-
புகழ் பெற்ற பசவண்ணர், கெம்பேகவுடா ஆகியோரின் சிலைகள் விதான சவுதாவில் அமைக்க மந்திரிசபையில் முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு இந்த பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக்கிற்கு வழங்கப்பட்டது. இன்று (நேற்று) நாங்கள் சிலைகளை அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளோம். நிர்வாக, ஆன்மிக சிந்தனைகள் மற்றும் பசவண்ணர், கெம்பேகவுடா ஆகியோரின் சிந்தனைகள் இந்த சக்தி சவுதா மூலம் மாநிலம் செல்ல வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம்.
புதிய கர்நாடகம்
அவர்களின் கொள்கைகள் விதான சவுதாவில் உள்ளவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். இதன் மூலம் புதிய கர்நாடகத்தை உருவாக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம் ஆகும். இந்த பணிகள் இன்று (நேற்று) தொடங்கியுள்ளது. இந்த பணிகள் அடுத்த 2 மாதங்களில் நிறைவடையும். இந்த சிலைகள் திறப்பு விழாவுக்கு அனைவரையும் அழைப்போம்.
இதற்கு ரூ.8 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். பசவண்ணரும், கெம்பேகவுடாவும் இந்த மண்ணின் மிகப்பெரிய மகன்கள். சமூகநீதியின் சாம்பியன் என்று பசவண்ணரை அழைக்கிறோம். அவர் தான் அனுபவ மண்டபம் மூலம் உலகில் முதல் முறையாக மக்கள் நாடாளுன்ற முறையை கொண்டு வந்தார். கெம்பேகவுடா பெங்களூருவை நிர்மாணித்து சிறப்பான ஆட்சி நிர்வாகத்தை நடத்தினார்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
சட்டசபை தேர்தல்
இதில் சபாநாயகர் காகேரி, மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, சுத்தூர் மடாதிபதிகள் சிவராத்திரி தேசிகேந்திர சுவாமி, பெஜாவர் மடாதிபதி விஸ்வபிரசன்னா தீர்த்த சுவாமி, சித்தகங்கா மடாதிபதி சித்தலிங்க மகாசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் முக்கிய தலைவர்கள் 2 பேருக்கு சிலை விதான சவுதாவில் அமைக்கப்படுகிறது. இவை தேர்தலுக்கு முன்பு திறக்கப்பட உள்ளது. பசவண்ணர் லிங்காயத் சமூகத்தை உருவாக்கியவர். அந்த சமூகம் பா.ஜனதாவின் முக்கிய வாக்கு வங்கியாக உள்ளது. கெம்பேகவுடா ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்தவர். இந்த சமூகம் மைசூரு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. அதனால் இந்த 2 சமூக மக்களின் ஆதரவையும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த தலைவர்களுக்கு சிலைகள் அமைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.