தேசிய விளையாட்டு வீரர் வீட்டில் பதக்கங்கள் திருட்டு
பெங்களூருவில் தேசிய விளையாட்டு வீரர் வீட்டில் பதக்கங்களை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெங்களூரு:-
பதக்கங்கள் திருட்டு
பெங்களூரு பத்மநாபநகர் பகுதியில் நாகராஜ்(வயது 74) என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் தேசிய விளையாட்டு வீரர் ஆவார். இந்த நிலையில் அவர் தனது வீட்டின் 3-வது தளத்தில், தான் வாங்கிய பதக்கங்கள் உள்பட ஏராளமான பழமையான பொருட்களை சேகரித்து வைத்து இருந்தார். இந்த நிலையில் அவரது வீட்டிற்குள் மர்மநபர்கள் புகுந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த பொருட்கள், பதக்கங்கள் உள்ளிட்டவற்றை திருடி சென்றனர்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த பதக்கங்கள் மற்றும் பொருட்கள் திருட்டு போனதை கண்டு நாகராஜ் அதிர்ச்சி அடைந்தார்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து அறிந்த நாகராஜ் உடனடியாக பத்மநாபநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரது வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் விளையாட்டு வீரர் நாகராஜ் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த பதக்கங்கள், பழமையான கேமரா உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் திருடி ெசன்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், நாகராஜின் வீட்டுக்கு தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை கைப்பற்றினர். இதுகுறித்து பத்மநாபநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தேசிய விளையாட்டு வீரர் வீட்டில் மர்மநபர்கள் பதக்கங்களை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.