ெபங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை- சிறப்பு கமிஷனர் சலீம் பேட்டி
‘டோயிங்’ முறையை மீண்டும் கொண்டுவர திட்டம் இல்லை என்றும், பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறப்பு கமிஷனர் சலீம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: 'டோயிங்' முறையை மீண்டும் கொண்டுவர திட்டம் இல்லை என்றும், பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறப்பு கமிஷனர் சலீம் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பான சாலை பயணம்
பெங்களூரு போக்குவரத்து சிறப்பு கமிஷனர் சலீம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பெங்களூருவில் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சினைகளை ஒப்பிடுகையில், தற்போது அதிகமாகியே இருக்கிறது. பெங்களூருவில் 1 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் உள்ளது.
பெங்களூருவில் 44 போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் உள்ளன. அந்த போலீஸ் நிலையங்களில் போலீசாருக்கு பற்றாக்குறை இல்லை. இணை கமிஷனருக்கு பதிலாக போக்குவரத்துக்கு சிறப்பு கமிஷனர் நியமிக்கப்பட்டு இருப்பதன் நோக்கமே, போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண்பது, வாகன ஓட்டிகள் பாதுகாப்பான சாலை பயணத்தை மேற்கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுப்பதாகும்.
டோயிங் திட்டம் இல்லை
போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்ப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க தலைமை செயலாளர், போலீஸ் கமிஷனர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் உயர்மட்ட கூட்டம் நடத்தப்படும். அவர்களது ஆலோசனைகள், கருத்துகளை பெற்று போக்குவரத்தில் புதிய திட்டம் கொண்டு வருவது குறித்து முடிவு செய்யப்படும். வாகன ஓட்டிகள் பெரும்பாலும் தங்களது நேரத்தை சாலைகளில் செலவழிக்க வேண்டிய காரணத்தால், போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை சரி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
. டோயிங் முறையை மீண்டும் கொண்டு வருவது பற்றி எந்த திட்டமும் இல்லை. போலீசார் அபராதம் விதிக்க மட்டும் பணியில் இல்லை. போலீசார் மீது மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.