குடகில் கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை


குடகில் கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குடகில் கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு கே.ராமராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குடகு:-

8 பேர் கைது

குடகு மாவட்டத்தில் அதிகளவு கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் சோதனை நடத்தினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆர்.ஜி. கிராமம், மடிகேரி பகுதியில் காரில் நின்றப்படி கஞ்சா விற்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் ஆர்.ஜி.கிராமத்தை சேர்ந்த சாதிக் பாஷா (வயது 33), கலீல் (37), விராஜ்பேட்டையை சேர்ந்த இலியாஸ் அகமது (44), ஹக்கத்தூரை சேர்ந்த தர்ஷன் (27), மடிகேரி சம்பிக்கே கேட்டை சேர்ந்த ஹக்கத்தூர் கிராமத்தை சேர்ந்த கிரண் குமார் (வயது 27), மூர்நாடு கிராமத்தை சேர்ந்த ககன் (26), நிரூப் (27), குஷால்நகரை சேர்ந்த வினய் (28) என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடும் நடவடிக்கை

இதுகுறித்து நிருபர்களுக்குபேட்டியளித்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கே.ராமராஜன் கூறியதாவது:-

குடகு மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள் குடகு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் ஒடிசாவில் இருந்து மைசூருவுக்கு ரெயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்தனர். பின்னர் அவர்கள் மைசூருவில் இருந்து குடகிற்கு கஞ்சாவை கடத்தி வந்தது விற்பனை செய்து வந்துள்ளனர்.

இந்த கஞ்சாவை சின்ன சின்ன பாக்கெட்டுகளில் அடைத்து, இளைஞர்களிடையே விற்பனை செய்து வந்ததாக தெரியவந்தது. குடகை கஞ்சா இல்லாத மாவட்டமாக மாற்றப்படும். கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா பயன்படுத்துவோர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story