சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் போலீசார் மீது கடும் நடவடிக்கை
சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு:-
பெங்களூருவில் நேற்று போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பெங்களூருவில் புலி தோல் விற்க முயன்றவரை கடத்தி ரூ.40 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த வழக்கில் மாரத்தஹள்ளி போலீஸ் தலைமை ஏட்டு கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருக்கும் சப்-இன்ஸ்பெக்டரும் கைது செய்யப்படுவார். ரூ.40 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த வழக்கில் 2 போலீசாருக்கு மட்டுமே தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தாலும், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் போலீசார் மீது எந்தவிதமான பாரபட்சமும் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போலீஸ் துறையில் 99 சதவீதம் பேர் நேர்மையாகவும், கடினமாக உழைத்தும் தங்களது கடமையை செய்து வருகின்றனர். ஒரு சில போலீசார் செய்யும் தவறால் ஒட்டுமொத்த போலீஸ் துறைக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. எனவே சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் போலீசார் மீது உரிய விசாரணை நடத்தி, அவர்களை பணி இடைநீக்கம் செய்வது அல்லது பணி நீக்கம் செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.