கோலாரில் சித்தராமையாவுக்கு எதிராக பலமான வேட்பாளர் நிறுத்தம்- மந்திரி ஸ்ரீராமுலு பேட்டி
கோலாரில் சித்தராமையாவுக்கு எதிராக பலமான வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று மந்திரி ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.
கொப்பல்: கோலாரில் சித்தராமையாவுக்கு எதிராக பலமான வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று மந்திரி ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.
கொப்பல் மாவட்டம் கங்காவதியில் போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீராமுலு நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பலமான வேட்பாளர் நிறுத்தம்
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா அடுத்த ஆண்டு (2023) நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தொகுதியை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தார். தற்போது பாதாமி தொகுதியை புறக்கணித்து விட்டு கோலாரில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறி இருக்கிறார். சித்தராமையா எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அவருக்கு எதிராக பா.ஜனதா பலமான வேட்பாளரை களத்தில் நிறுத்தும். அதன்படி, கோலார் தொகுதியிலும் சித்தராமையாவுக்கு எதிராக பலமான வேட்பாளர் நிறுத்தப்படுவார்.
கடந்த முறை பாதாமியில் சித்தராமையாவை எதிர்த்து நான் போட்டியிட்டேன். குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் சித்தராமையா வெற்றி பெற்றிருந்தார். எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் சித்தராமையாவுக்கு தோல்வி உறுதி தான்.
டி.கே.சிவக்குமார் மீது பயம்
ஏனெனில் சித்தராமையாவுக்கு பா.ஜனதாவை விட டி.கே.சிவக்குமார் மீது தான் பயம் அதிகமாகும். டி.கே.சிவக்குமார் ஆதரவு இல்லாமல் தொகுதியை தேடும் பணியில் ஈடுபட்டு, இறுதியில் கோலாரில் போட்டியிட சித்தராமையா தீர்மானித்திருக்கிறார். அங்கும் அவருக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் டி.கே.சிவக்குமார் ஏதேனும் செய்து விடுவார் என்பது தான் அந்த பயம் ஆகும்.
சட்டசபை தேர்தலுக்காக கோலாரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது பலத்தை சித்தராமையா காட்டி இருக்கிறார். தேர்தல் நேரத்தில் கோலாரில் போட்டியிடலாம், வருணா தொகுதியில் கூட சித்தராமையா போட்டியிடலாம். அரசியலில் புது வாழ்வு கொடுத்த பாதாமி மக்களை மறந்துவிட்டு, அந்த தொகுதி மக்களுக்கு சித்தராமையா துரோகம் செய்து விட்டார்.
இவ்வாறு ஸ்ரீராமுலு கூறினார்.