இந்தியாவை ஆற்றல்மிக்க நாடாக உருவாக்க மாணவர்களின் சக்தியே அடிப்படை: பிரதமர் மோடி பேச்சு
இந்தியாவை ஆற்றல் வாய்ந்த நாடாக உருவாக்குவதற்கு மாணவர்களின் சக்தியே அடிப்படையாக உள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்று கிழமையில் வானொலி வழியே மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் பேசி வருகிறார். அந்த வகையில், இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அவர் பேசும்போது, இந்திய தொழிற்சாலைகள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் நுட்பங்களை விண்வெளி துறையில் கொண்டு வருகின்றன. இந்திய இளைஞர்களுக்கு விண்வெளி துறையின் வாய்ப்புகளை திறந்து விட்ட பின்னர், அவற்றில் புரட்சிகர மாற்றங்கள் வர தொடங்கியுள்ளன.
இந்தியாவை ஆற்றல் வாய்ந்த நாடாக உருவாக்குவதற்கு மாணவ மாணவியர்களின் சக்தியே அடிப்படையாக உள்ளது. இன்றைய இளைஞர்கள் தங்களது திறமையால், வருகிற ஆண்டுகளில் நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வார்கள் என மோடி பேசியுள்ளார்.
சுற்றுச்சூழலை நோக்கிய உணர்வுதிறனுடன் இருப்பது நமது வாழ்க்கைக்கான வழியாகும். சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைகளை பற்றி மக்கள் சமீப காலங்களில் அதிக விழிப்புணர்வுடன் உள்ளனர்.
சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருட்களை பற்றிய எச்சரிக்கை உணர்வும் சமீப காலங்களில் நம்முடைய மக்களிடம் அதிகரித்து காணப்படுகிறது என்று அவர் பேசியுள்ளார்.