மாணவர்கள் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு
மாணவர்கள் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மைசூருவில் நடந்த விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா பேசினார்.
மைசூரு
தரமான கல்வி
மைசூரு மாவட்டம் ஹெப்பால் பகுதியில் ஆதிசுஞ்சனகிரி மடம் உள்ளது. இந்த மடத்தில் புதிய கட்டிடங்கள் மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதி திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், ஆதிசுஞ்சனகிரி மடத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் தரமானகல்வியை கற்றுக்கொண்டு நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும். மேலும் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்று நாட்டிற்கு பெருமை தர வேண்டும்.
பள்ளி மாணவர்கள் தரமான கல்வி கற்று கொள்வது அவசியம். படிப்பது, எழுதுவது, பேசுவதை மட்டுமே கற்று கொண்டால் போதாது. அது கல்வி ஆகாது. கல்வி கற்றுக் கொண்ட பிறகு ஜாதி, மதம் வெறி பிடித்தவர்களால் மாறுபவர்களால் நாட்டுக்கு எந்தவொரு பிரயோஜனமும் ஆகாது.
மனிதாபிமானம் வேண்டும்
மேலும் அவர்கள் கற்றுக் கொண்ட கல்விக்கு அர்த்தம் இருக்காது. விஞ்ஞான முறையிலான கல்வியை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ஏதோ ஒரு ஜாதியில், மதத்தில் பிறந்திருக்கிறோம், ஒரே ஜாதி மதத்தை சேர்ந்தவர்கள் கல்வி கற்றுக்கொள்ள வேண்டும் என்பது இல்லை.
எல்லோருக்கும் கல்வி அவசியம். அந்த கல்வி மனிதாபிமானத்துடன் இருக்க வேண்டும்.
தர்மத்திற்காக மனிதர்கள் அல்ல. தர்மம் இருப்பதே மனிதர்களின் நலத்திற்காக தான். அதனால் எல்லோரும் மனிதாபிமானம் உள்ளவர்கள் ஆக இருக்க வேண்டும். எல்லோருக்கும் நல்லதே செய்யும் வகையில் நல்ல மனிதர்களாக வாழவேண்டும்.
அதிகம் பேசுவதில்லை
மனிதன் மற்றவர்களை அன்புடன், பாசத்துடன், கருணையுடன் காண்பது தர்மம். எந்த மதத்தில் அன்பு, பாசம், கருணை இருக்காதோ அது மதம். அல்ல. தர்மமும் அல்ல. மதம் மற்றும் தர்மங்களை பற்றி நான் அதிகம் பேசுவதில்லை. பேசினால் அது வேறு அர்த்தத்திற்கு போய்விடும்.
மேலும் விவாதத்திற்கு காரணம் ஆகிவிடும். அதனால் இது சம்பந்தமாக பேச விரும்ப மாட்டேன்.இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.