வங்கி முறைகேடுகள் தொடர்பாக சுப்பிரமணியசாமி வழக்கு- மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
வங்கி முறைகேடுகள் தொடர்பாக சுப்பிரமணியசாமி தாக்கல் செய்த பொதுநல மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
பல்வேறு வங்கி முறைகேடுகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி உயர் அதிகாரிகளிடம் சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியசாமி பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா அடங்கிய அமர்வு விசாரித்தது.
சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்
அப்போது சுப்பிரமணியசாமி ஆஜராகி, வங்கி முறைகேடுகள் தொடர்புடைய கடன்களை வழங்கியதில் பங்கு வகித்த ரிசர்வ் வங்கியின் அனைத்து இயக்குனர்களையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், தனிபட்ட நபரின் பங்கை சி.பி.ஐ. கண்டறியாதபோது, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடமுடியுமா என கேட்டனர்.
விசாரணை முடிவுக்கு வரவில்லை
அதற்கு பதில் அளித்த சுப்பிரமணியசாமி, ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் நியமிக்கப்பட்டவர்கள். சாதாரண நபர்கள் இல்லை. கடன் பரிசீலனை குழுவுக்கு தலைமை ஏற்றவர்கள். அதன்படி, ரிசர்வ் வங்கி போர்டின் முழுமையான உறுப்பினர்கள். எனவே, பிற இயக்குனர்கள் குற்றமுடைவர்கள் என்றால், ரிசர்வ் வங்கியின் பிரதிநிதியையும் விசாரிக்க வேண்டும். பிற இயக்குனர்களைப் போல ரிசர்வ் வங்கியின் அதிகாரிகளையும் விசாரிக்காமல் இருப்பது சமத்துவ உரிமையை மீறுவதாகும். கடந்த 10 ஆண்டுகளில் எவ்வித விசாரணையும் முடிவுக்கு வரவில்லை என வாதிட்டார்.
மத்திய அரசுக்கு உத்தரவு
வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.