சசிகலா திருத்தணியில் திடீர் சுற்றுப்பயணம்


சசிகலா திருத்தணியில் திடீர் சுற்றுப்பயணம்
x
தினத்தந்தி 26 Jun 2022 8:41 AM IST (Updated: 26 Jun 2022 10:01 AM IST)
t-max-icont-min-icon

தற்போது, அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அது தனக்கு சாதகமாக அமையுமா? என்று எதிர்பார்க்கிறார்.

சென்னை,

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தண்டனை முடிந்து அவர் சென்னை திரும்பியபோது, ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை.

இதனால், விரக்தியில் இருந்த சசிகலா, முதலில் அரசியலில் இனி ஈடுபடப்போவதில்லை என்று அறிவித்தார். அதன்பிறகு, மீண்டும் அரசியலில் ஈடுபடப்போவதாக தெரிவித்த அவர், கட்சி நிர்வாகிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அது, சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது.

இருந்தாலும், சசிகலாவின் முயற்சிகள் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்தநிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு மக்களை சந்திக்கும் முடிவை அவர் எடுத்துள்ளார். தற்போது, அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அது தனக்கு சாதகமாக அமையுமா? என்று எதிர்பார்க்கிறார். உடனடியாக தனது சுற்றுப்பயண திட்டத்தையும் அவர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரின் முகாம் அலுவலகம் என்ற பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் 'திருத்தணி, கோரமங்கலம், கே.ஜி.கண்டிகை, எஸ்.வி.ஜி.புரம், கிருஷ்ணாகுப்பம், ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம் ஆகிய இடங்களில் சசிகலா இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுப்பயணம் செய்து ஆதரவாளர்களை சந்தித்து பேசுகிறார். மேலும் அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கும் மாலை அணிவிக்கிறார்' என்று கூறப்பட்டுள்ளது.


Next Story