4-வதும் பெண் குழந்தை பிறந்ததால் மனமுடைந்து விவசாயி தற்கொலை
4-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் மனமுடைந்து தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் அருகே நடந்துள்ளது.
கோலார் தங்கவயல்:
4-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் மனமுடைந்து தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் அருகே நடந்துள்ளது.
தூக்குப்போட்டு தற்கொலை
கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் தாலுகா ஷெட்டிஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகேஷ். விவசாயி. இவரது மனைவி மஞ்சம்மா. இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் மஞ்சம்மா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். நேற்று முன்தினம் மஞ்சம்மாவுக்கு சீனிவாசப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. இதில் 4-வதாகவும் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.
4-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் மஞ்சம்மாவும், லோகேசும் மனமுடைந்தனர். சோகமாக இருந்து வந்தனர். மனைவி ஆஸ்பத்திரியில் இருந்த நிலையில், லோகேஷ் மட்டும் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த அவரது மகள்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உருக்கமான கடிதம்
பின்னர் அவர்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தனர். இதனால் பதற்றம் அடைந்த அக்கம்பக்கத்தினர், லோகேசின் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு லோகேஷ் தூக்கில் பிணமாக தொங்கினார். 4-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் இதுபற்றி அவர்கள் சீனிவாசப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் லோகேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் நடத்திய சோதனையில் லோகேஷ் கைப்பட எழுதி இருந்த ஒரு உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
4-வதாகவும் பெண் குழந்தை
அந்த கடிதத்தில், 'ஏற்கனவே எங்களுக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். அவர்களை கரைசேர்ப்பதே எங்களுக்கு பெரிய விஷயம். இந்த நிலையில் 4-வதாக ஆண் பிள்ளை பிறக்கும் என்று நினைத்தேன். ஆனால் 4-வதாகவும் பெண் குழந்தை பிறந்தது. இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன். என் சாவுக்கு நானே முழு பொறுப்பு. வேறு யாரும் காரணம் இல்லை' என்று எழுதப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.