14-வது மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை
பெங்களூருவில் பள்ளியில் நடந்த தேர்வின் போது காப்பி அடித்ததால் ஆசிரியர் திட்டியதால் 14-வது மாடியில் இருந்து கீழே குதித்து மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் பள்ளியில் நடந்த தேர்வின் போது காப்பி அடித்ததால் ஆசிரியர் திட்டியதால் 14-வது மாடியில் இருந்து கீழே குதித்து மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவன் தற்கொலை
பெங்களூரு சம்பிகேஹள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் சொக்கனஹல்வியைச் சேர்ந்தவர் முகமது நூர். இவரது மகன் மோகின்(வயது 15). இந்த சிறுவன் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று மாலையில் தனது வீட்டின் அருகே உள்ள அடுக்குமாடிக்கு மோகின் சென்றான். குடியிருப்பின் 14-வது மாடிக்கு சென்ற சிறுவன், மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்றான்.
அப்போது 14-வது மாடியில் உள்ள தடுப்புசுவரை பிடித்தபடி சிறுவன் தொங்கினான். ஆனால் நீண்ட நேரம் தொங்க முடியாதால் கையை விட்டுவிட்டான். இதனால் 14-வது மாடியில் இருந்து கீழே விழுந்து சிறுவன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதுபற்றி அறிந்ததும் சம்பிகேஹள்ளி போலீசார் விரைந்து சென்று மோகினின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
வீடியோ வெளியாகி பரபரப்பு
மோகின் படிக்கும் பள்ளியில் நேற்று தேர்வு நடந்துள்ளது. அப்போது சக மாணவனை பார்த்து மோகன் காப்பி அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவனை ஆசிரியர் திட்டி வெளியே அனுப்பியதாக தெரிகிறது. இதன் காரணமாக மனம் உடைந்த மோகின் 14-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அதே நேரத்தில் தற்கொலை செய்வதற்காக மாடியில் இருந்து குதிக்க முயன்ற சிறுவனை குடியிருப்பில் வசிப்பவர் காப்பாற்ற முயன்றும் முடியாமல் போனது.
இதற்கிடையில் சிறுவன் மோகின் 14-வது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயற்சிப்பது, அங்குள்ள சுவரை பிடித்து தொங்குவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து சம்பிகேஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.